This article is from Apr 01, 2020

பாட்டி வைத்தியத்தில் கொரோனா மாத்திரையா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

இந்த மருந்தை அனைவரும் சாப்பிடுங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றால் மக்கள் அனைவரும் பதற்றத்திற்குள் சிக்கியுள்ளார்கள். ஆகையால், கொரோனா வைரஸ் வராமல் தடுக்க உதவும் மருந்துகளை நோக்கியே மக்களின் கவனம் செல்கிறது.

ஆகையால், கொரோனா வைரசை குணப்படுத்தும் என பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து உள்ளன. குறிப்பாக, சித்த மருத்துவம், பாட்டி வைத்தியத்தில் குறிப்பிட்டுள்ளதாக மருத்துவ குறிப்புகளை சமூக வலைதளங்களில் எந்தவொரு முறையான ஆலோசனையும் இல்லாமல் பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், 1914-ம் ஆண்டு அச்சிடப்பட்ட பாட்டி வைத்தியம் எனும் புத்தகத்தில் ” கோரோன மாத்திரை ” எனும் மருந்து இருப்பதாகவும், அதனை உடனே சாப்பிடுமாறு அப்புத்தகத்தின் பக்கம் பரிந்துரை செய்யப்பட்டு பகிரப்படுகிறது.

உண்மை என்ன ? 

வைரலாகும் மருத்துவக் குறிப்பு குறித்து சித்த மருத்துவர் சுசித்ரா அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ” கோரோசனம் மாத்திரையே “. இது மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மூச்சுத்திணறல் கோளாறுகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த குறிப்பு கொரோனா வைரசிற்கானது எனப் பரவும் தகவல் தவறானது ” எனத் தெரிவித்து இருந்தார்.

 

சித்த மருத்துவரின் தகவல் மட்டுமின்றி வைரலாகும் புத்தகத்தின் ” கோரோசன மாத்திரை ” என இடம்பெற்று இருக்கும் அதே புத்தகத்தின் பக்கம் நமக்கு கிடைத்தது. அதில், “ச” எழுத்தை நீக்கி எடிட் செய்து அப்பக்கத்தினை வைரல் செய்து இருக்கக்கூடும்.

ஏற்கனவே, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கபசுர குடிநீரை பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையை வழங்கிய பிறகு பல இடங்களில் கபசுர குடிநீர் மருந்தினை தேவைக்கு அதிகமாகவே மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்படி இருக்கையில், சித்த மருத்துவத்தை மேற்கொள்காட்டி தவறான செய்திகள் பரவும் பட்சத்தில் மக்கள் அதனையே நாடிச் செல்லும் நிலை உருவாகும் எனும் புரிதல் அனைவரிடத்திலும் வேண்டும்.

Please complete the required fields.




Back to top button
loader