சாமி சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை செய்கிறார்களா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

மனிதனை காக்க வேண்டிய கடவுளுக்கு கொரோனா வந்து விட்டதாம் அதனால் இந்த மாங்காய் மடையர்கள் கடவுளுக்குகொரோனா சிகிச்சை செய்கிறார்களாம். நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பும் இந்தியாவில் இப்படி ஒரு முட்டாள் கூட்டம் இருப்பதைக் கண்டு வருத்தப் படுவதா வேதனைப்படுவதா.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு குறையாத காலக்கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாமி சிலைகளுக்கு மருத்துவம் பார்ப்பதாகக் கூறி படுக்கையில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து அருகே மூன்று பேர் இருக்கும் புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது. இப்படி வைரலாகும் புகைப்படம் வழிபாடா மற்றும் எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

Advertisement

உண்மை என்ன ? 

கடவுள் சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை செய்வதாக சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பதை பார்க்கையில் சிகிச்சை செய்வதை போன்று தெரியவில்லை. கொரோனா காலத்தில் கடவுள் சிலைகளுக்கு கூட மாஸ்க் அணிவித்த செய்திகள் வெளியாகின.

ஆனால், புகைப்படத்தில் யாரும் மாஸ்க் அணியவில்லை மற்றும் புகைப்படத்தில் இருக்கும் மூன்று பேரும் இந்தியர்களை போல் இல்லை. ஆனால், பதிவுகளில் இந்தியர்கள் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து பார்க்கையில், புகைப்படத்தில் இடம்பெற்று இருப்பது வழிபாட்டு முறையாக இருக்கும் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் எனத் தோன்றுகிறது.

Advertisement

இதுகுறித்து தேடிய பொழுது, 2019 ஜூலை 26-ம் தேதி vk.com எனும் தளத்தில் வெளியான வீடியோவில் வழிபாடு செய்யப்படும் சிலைகள், வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் சிலைகளும் ஒன்றாக இருக்கிறது. இரண்டிலும் சிலைகளின் கைகள் மேல் நோக்கியும், ஒரே மாதிரியான உடைகளும் இருப்பதை காணலாம்.

மேற்கொண்டு தேடுகையில், 2019 ஜூலை 26-ம் தேதி Valmiki das எனும் ரஷ்யா யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட பிறகான காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

புகைப்படத்தில் இடம்பெற்ற நபரும் வீடியோவில் இருப்பதை பார்க்கலாம். ரஷ்ய மொழியில் ” Даршан Шри Панча-Таттвы на отдыхе ” என இடம்பெற்ற தலைப்பை மொழிமாற்றம் செய்கையில் ” Darshan Yuri Pancha-Tattva on vacation ” எனத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து தேடிய பொழுது, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பால் நடத்தப்படும் வழிபாட்டு நிகழ்ச்சி என அறிய முடிந்தது.

முடிவு : 

நம் தேடலில், கடந்த ஆண்டில் ரஷ்யா நாட்டில் நிகழ்ந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியின் புகைப்படத்தினை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாமி சிலைகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக இந்தியாவில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button