கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு எய்ட்ஸா ?

பரவிய செய்தி
ஊசி செலுத்தப்பட்டோருக்கு கொடிய எய்ட்ஸ் நோயை உண்டாகும் ஹெச்.ஐ.வி வைரஸ் இருப்பதாக சோதனைகள் காண்பித்தன. யாருக்கெல்லாம் ஊசி போட்டாங்களோ கொரோனா வைரஸ் கிட்ட இருந்து காப்பதும் தடுப்பூசி என மருத்துவர்கள், விஞ்ஞானிகள் சந்தோசம் அடைஞ்சாங்க. இந்த மாறி ஊசிப் போட்டவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுது என ஆய்வு செய்து பார்ப்பார்கள். அப்படி விஞ்ஞானிகளுக்கு என்ன தெரிய வந்தது.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை வைத்து நடத்திய சோதனையில் ஊசி செலுத்தியவர்களுக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் இருப்பதாக சோதனை முடிவுகள் காண்பித்தன என தந்தி டிவி சேனலில் வெளியான 25 நொடிகள் கொண்ட செய்தியின் பகுதி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தந்தி டிவி சேனலில் வெளியான வீடியோ குறித்து தேடுகையில், ” 2020 டிசம்பர் 11-ம் தேதி ” விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொரோனா தடுப்பூசி – நடந்த விபரீதம் என்ன? ” எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் 1.25வது நிமிடத்தில் பரவும் பகுதி இடம்பெற்று இருக்கிறது.
ஆனால், வீடியோவைத் தொடர்ந்து பார்க்கையில்,” ஊசி செலுத்தப்பட்டோருக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் இருப்பதாக காண்பித்தது. விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமரும் பேரதிர்ச்சி அடைந்தனர். தீவிர சோதனை செய்ததில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் இல்லை என்றாலும் இருக்கிறது என முடிவு வெளியானது அம்பலம். உண்மையில், இவர்களுக்கு ஹெச்.ஐ.வியும் கிடையாது, எய்ட்ஸ்-ம் கிடையாது, மோசமான வைரஸ் கிருமியும் உள்ளே கிடையாது என விஞ்ஞானிகள் தகவல் சொன்னார்கள். ஊசி போட்டுக்கொண்டோர் நிம்மதி அடைந்தனர். இந்த குழப்பத்தால் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பிரதமர் தடை செய்தார். 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட ஆய்வுகளையும் கைவிட உத்தரவிட்டார் ” என வெளியாகி இருக்கிறது.
” ஆஸ்திரேலியா நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ஹெச்.ஐ.வி இருப்பதாக தவறான முடிவுகள் காண்பித்த காரணத்தினால் தடுப்பூசி சோதனையை ஆஸ்திரேலியா கைவிட்டதாக ” 2020 டிசம்பர் 11-ம் தேதி பிபிசி உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோருக்கு எய்ட்ஸ் நோயை உண்டாகும் ஹெச்.ஐ.வி வைரஸ் இருப்பதாக சோதனைகள் காண்பித்தன என பரவும் தந்தி டிவி செய்தியானது கடந்த ஆண்டு வெளியான செய்தியின் ஒரு பகுதி மட்டுமே. முழுமையான செய்தியில், ஆஸ்திரேலியாவின் தடுப்பூசியை ஹெச்.ஐ.வி வைரஸ் இருப்பதாக தவறான முடிவுகள் காண்பித்ததாகவும், அந்த தடுப்பூசி சோதனையை கைவிட்டதாகவும் வெளியாகி இருக்கிறது என அறிய முடிகிறது.