ஓமைக்ரான் முன்பே திட்டமிட்ட சதியா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கோவிட்-19 நோய்த்தொற்று உலகளாவிய பிரச்சனையாக இன்றளவும் இருந்து வருகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் எந்தெந்த காலங்களில் வெளிப்படும் என்றும், அதன் அறிவியல் பெயர் என்னவென்றும் வரிசையாக இடம்பெற்றுள்ள பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், வேர்ல்ட் எகனாமிக் ஃபார்ம் மற்றும் உலக சுகாதார மையத்தின் லோகோ உடன் பரவும் இப்பட்டியல் திட்டமிட்டு முன்பே தயாரித்து வைக்கப்பட்டது என்றும், அதன்படியே ஒவ்வொரு உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பரப்பப்பட்டு வருகிறது.
இந்த பட்டியலில், சமீபத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் ஓமைக்ரான் வைரஸ் 2022 மே மாதத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது போன்று குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பெருந்தொற்றின் தொடக்கத்தில் இருந்தே விஞ்ஞானிகள் பல்வேறு பிறழ்கள் மற்றும் சாத்தியமான மாறுபாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்கள். உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு அது கண்டறியப்பட்ட நாடுகளின் பெயரை வைத்து அழைத்தது பிரச்சனையாகவே கிரேக்க எழுத்துக்களில் பெயர்களை வைத்தது உலக சுகாதார மையம்.
தற்போதைய ஓமிக்ரான்/ஓமைக்ரானுக்கு முன்பாக ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என நான்கு மாறுபாடுகள் தொடர்பான பெயர்களே முதன்மையாக அறியப்பட்டுள்ளன. உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி, Variant of interest and variants of concern என இதுவரை 10 வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
2021 நவம்பரில் பரவத் தொடங்கிய ஓமைக்ரானை 2022 மே மாதம் என வைரல் பட்டியலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதேபோல், இதற்கு முந்தைய ஆல்பா, பீட்டா மாறுபாடுகள் குறித்து குறிப்பிடவில்லை. மேலும், டெல்டா மாறுபாடு ஜூன் 2021ல் வெளிப்பட்டது என பட்டியலில் கூறப்பட்டுள்ளது. உண்மையில், டெல்டா மாறுபாடு முதன்முதலில் அக்டோபர் 2020-ல் இந்தியாவில் கண்டறியப்பட்டது. மே 11-ம் தேதி உலக சுகாதார மையத்தால் விஓசி ஆக அறிவிக்கப்பட்டது.
வைரல் பட்டியலில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், வேர்ல்ட் எகனாமிக் ஃபார்ம் மற்றும் உலக சுகாதார மையத்தின் லோகோ மட்டுமின்றி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் லோகோவும் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், எந்த அமைப்பும் எதிர்காலத்தில் வெளிப்படும் கொரோனா மாறுபாடுகள் குறித்த பட்டியலை வெளியிடவில்லை.
இது தொடர்பாக ஆகஸ்ட் 8-ம் தேதி ராய்டர்ஸ் வெளியிட்ட கட்டுரையில், வேர்ல்ட் எகனாமிக் ஃபார்ம், உலக சுகாதார மையம், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் செய்தித்தொடர்பாளர்கள் வைரல் செய்யப்படும் பட்டியலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என மறுத்துள்ளதைக் குறிப்பிட்டு உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், கொரோனா வைரஸ் மாறுபாடுகள் வெளிப்படும் காலங்கள் எப்போது என முன்கூட்டியே திட்டமிட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும், அதன்படி நடப்பதாகவும் பரவும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.