கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையா ?

பரவிய செய்தி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை, நாம் ஆண்டவரிடத்தில் பிரார்த்தனை செய்வோம்.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் மேலோங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த வீடியோக்கள், ஆடியோக்களே சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், அது குறித்த தகவல்களே பகிரப்படுகிறது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை என மருத்துவமனையில் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் குழந்தையின் வீடியோ முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. பலரும் அக்குழந்தையின் நிலைக்கு வருத்தம் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை என பரப்பப்படும் வீடியோவில் இருக்கும் குழந்தை யார், எந்த நாட்டுக் குழந்தை, செய்தி தரவுகள் உள்ளிட்ட விவரங்கள் ஏதும் அளிக்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆண்டவரிடத்தில் பிராத்தனை செய்யுங்கள் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
வைரலாகும் குழந்தை வீடியோவில் நம்பகத்தன்மை இல்லாத காரணத்தினால் அக்குழந்தையின் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2019 அக்டோபர் மாதம் 30-ம் தேதி பதிவு செய்யப்பட்ட முகநூல் பதிவு கிடைத்து., அதில், குழந்தையின் நிலையை குணப்படுத்த கடவுளிடம் வேண்டப்பட்டு பதிவாகி இருக்கிறது. எனினும் அந்த வீடியோ பதிவு முகநூலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வரை தாக்குதல் 2019 டிசம்பர் மாதத்தில் இருந்தே தொடங்கி உள்ளது. வைரல் குழந்தையின் வீடியோ அதற்கு முன்பே பரவி உள்ளது. எனினும், குழந்தை குறித்த பிற பதிவுகளோ, விவரங்களோ கிடைக்கவில்லை.
கொரோனா வைரசால் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என கூறி விட முடியாது. பிப்ரவரி 2-ம் தேதி வுஹானில் பிறந்த 30 மணி நேரமே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தெற்கு கரோலினாவில் 7 மாதக் குழந்தைக்கும், மரியாலேண்ட் பகுதியில் 10 மாதக் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக சிகிச்சை பெறும் குழந்தையின் பழைய வீடியோவை வைத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை என தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.