This article is from Jan 31, 2020

கொரோனா வைரஸை தடுக்கும் ஹோமியோபதி மருந்தினை அரசு வெளியிட்டதா ?

பரவிய செய்தி

ஹோமியோபதி மருந்தான Arsenicum album 30 என்பதை தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். ஒருவேளை, பாதிப்பு தொடர்ந்தால் இதே மாதிரியில் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும்.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

சீனாவில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்டு பல நாடுகளுக்கு பரவி வருகிறது. சீனாவில் இருந்து இந்தியா வந்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல்கள் மேன்மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் ஹோமியோபதி மருந்தினை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டு உள்ளதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. ” ஆர்சனிகம் ஆல்பம் 30 ” என்ற ஹோமியோபதி மருந்தினை எடுத்துக் கொண்டால் வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ? 

கடந்த செவ்வாய்கிழமை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹோமியோபதி ஆராய்ச்சியின் மத்திய சபை (CCRH) உடைய அறிவியல் ஆலோசனைக் குழுவானது கொரோனா வைரஸின் தொற்றை ஹோமியோபதியின் வழியாக தடுக்கும்வழி குறித்து ஆலோசித்து உள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஒருவேளை கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டால் அதற்காக மேற்கொள்ள ஆயுர்வேத நடைமுறைகள் மற்றும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30-ஐவெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்தொற்றை தடுப்பதில் பயன்படுவதாகக் கூறி சில ஆயுர்வேத மருந்துகள் மற்றும் யுனானி மருந்துகள் மற்றும் சில வீட்டு மருந்துகள் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

மத்திய அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில், ” ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட ஆலோசனைகள் தொற்றினைத் தடுக்கக்கூடியவை மட்டுமே , nCoV தொற்றுக்கான சிகிச்சை ஆலோசனை அல்ல ” என்று குறிப்பிட்டு உள்ளதாகவும் எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை, எப்படி நம்புவது உள்ளிட்ட பல கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது. உண்மையில், ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகள் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கக்கூடியவையா என கேள்விகள் உள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த மருந்துகளும் இதுவரை எந்தவொரு மருத்துவ சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை. எம்மாதிரியான நிவாரணத்தை வழங்குகிறது அல்லது தொற்றுநோயைத் தடுக்கும் திறன் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மருந்துக்கள் சோதிக்கப்படவில்லை. இருப்பினும்கூட, எந்தவித தயக்கம் இல்லாமல் வைரஸ் தொற்றை தடுக்கக்கூடிய மருந்தாக ஹோமியோபதி மருந்துகளை ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. மேலும், எந்தமாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடவில்லை.

ஹோமியோபதி மருந்து குறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் பேசிய பொழுது, கொரோனா ஒரு புது வகையான வைரஸ். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஒருவரிடம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படி இருக்கையில், ஆய்வுக்கு உட்படுத்தாத மருந்தினை பரிந்துரை செய்வது சரியானது அல்ல ” எனக் கூறினார்.

ஆர்சனிகம் ஆல்பம் 30 எனும் ஹோமியோபதி மருந்தினை மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்தாக பயனளிக்கும் என பரிந்துரை செய்து அறிக்கையில் கூறி இருப்பது உண்மையே. ஆனால், ஹோமியோபதி, யுனானி மருந்துக்கள் வைரஸ் தொற்றின் பாதிப்பிற்கு தீர்வாகுமா, எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என கேள்விகள் உள்ளன.
இந்த மருந்தினை சாப்பிட்டால் கொரோனா வராது என உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில், இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் மீது எந்தவொரு ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. சமூக வலைதளங்களில் சுற்றி வரும் மருந்துகளை முழுமையாக நம்பாமல், உடலில் ஏதேனும் நோய் தொற்றின் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader