7 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரசை கணித்த ட்வீட்| உண்மை என்ன ?

பரவிய செய்தி

2013-ம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் குறித்து முன்கணித்த ட்வீட்.

Tweet link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

உலக அளவில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் இறப்பிற்கு காரணமான நோவல் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. குறிப்பாக, கொரோனா வைரஸ் அமெரிக்க சதியால் உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி 7 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட ஒன்று என பல கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

Advertisement

மேலும் படிக்க : சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது அமெரிக்க சதியா ?

2013-ம் ஆண்டு ஜூன் மாதம் Marco Acortes எனும் ட்விட்டர் பக்கத்தில் ” Corona virus…Its coming ” என பதிவிட்டது தற்பொழுது உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரசின் தாக்குதல் நடைபெறும் என்பதை 7 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து உள்ளதாக கூறி வைரல் செய்ய அந்த ட்வீட் தற்போது ஊடகங்கள் வரை வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் என்பது ஒரு வைரஸ் குடும்பம். அதில் இடம்பெறும் வைரசுகளை பொதுவாக கொரோனா வைரஸ் என்றே அழைத்து வருகின்றனர். தற்பொழுது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவது நோவல் கொரோனா வைரஸ் (COVID-19). இதற்கு முன்பாகவும் கொரோனா வைரஸ் தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது.

Advertisement

2003-ம் ஆண்டில் தொடங்கி 5 மனித கொரோனா வைரஸ் குறித்து அடையாளம் காணப்பட்டது. சார்ஸ் கொரோனா மற்றும் மெர்ஸ் கொரோனா போன்றவை அனைவரும் அறிந்த கொரோனா வைரஸ்கள்.

2019 மார்ச் 11-ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தளத்தில் மெர்ஸ் (Middle East Respiratory Syndrome-MERS) வைரஸ் குறித்து வெளியிட்ட தகவலில், மெர்ஸ் வைரஸ் தாக்குதல் 2012-ம் ஆண்டில் சவூதி அரேபியாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டில் MERS-CoV தாக்குதல் அறியப்பட்ட பிறகு 2013-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் வருவதாக மார்கோ ட்வீட் செய்துள்ளார். அவர் தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தி வரும் COVID-19 வைரஸ் குறித்து கூறினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்தது குறித்து அறியாமலும் 7 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ட்வீட் என உலக அளவில் வைரல் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : 1981-ல் வெளியான நாவலில் “வுஹான் 400” என கொரோனா வைரஸ் கணிக்கப்பட்டதா ?

இதற்கு முன்பாக, அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய ” The Eyes of Darkness ” நாவலில் “wuhan-400” என சீனாவின் வுஹான் நகரத்தை குறிப்பிட்டு உயிரி ஆயுதத்தை உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்ட வார்த்தையை வைத்து 39 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் குறித்து கணித்து உள்ளதாக உலக அளவில் வைரல் செய்தனர். ஆனால், அந்த நாவலில் முதலில் இடம்பெற்ற கோர்கி-400 என்பதற்கு பதிலாகவே வுஹான் சேர்க்கப்பட்டது என விரிவாக நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

கொரோனா வைரஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் வதந்திகளை, தவறான தகவல்களை உண்மை என நம்பாமல் வைரஸ் குறித்த சரியான தகவல்களை மட்டும் பகிரவும். தவறான செய்திகளை பரப்பினால் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கூடுதல் தகவல் :

2020ல் பரவியது போன்று 2021-லும் கொரோனா வைரஸ் 8 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டதாக இதே ட்வீட் பதிவு சமூக ஊடகத்தில் மற்றும் செய்திகளில் வைரலாகி வருகிறது.

இதனுடன் உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் ” Novel coronavirus summary and literature update – as of 17 May 2013 ” என 2013ம் ஆண்டில் நோவல் கொரோனா வைரஸ் பற்றி வந்த தகவலையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் பேசுகையில், ” கொரோனா வைரஸ் ஒரு பெரிய குடும்பம். புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்படும் போது ஆரம்பத்தில் நோவல் என அழைக்கப்படுகிறது. இதற்கு புதிய வைரஸ் என்று அர்த்தம். பின்னர் அது மெர்ஸ் வைரஸ் என பெயரிடப்பட்டன. மெர்ஸ்-க்கு முன்பாக சார்ஸ் வைரஸ் இருந்தது, தற்போது இருப்பது கோவிட்-19 வைரஸ் ” என விளக்கம் அளித்து இருந்தார்.

உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் 2019-ல் பரவத் தொடங்கிய கோவிட் வைரஸ் பெயர் வைக்கப்பட்டது குறித்தும் வெளியாகி இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button