கொரோனா வைரஸ் தொடர்பாக சித்தர்கள் எழுதிய பாடல்களா ?| உண்மை அறிக.

பரவிய செய்தி
கிமு 400 ஆம் நூற்றாண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி சித்தர் போகர் எழுதிய பாடல்..
” சரவணனடி வாழ் அரவும்
விடப்பற் கொண்டு நெளியும்
வெட்டியதை புசிப்பவர் தம்
உடலில் சுவாசம் திணறும்
ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும்
உடற் மண்டலம் சிதைந்து
உயிர் போகுமே பறந்து “.
மதிப்பீடு
சுருக்கம்
கொரோனா வைரஸ் வருவதை அறிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே போகர், அகத்தியர், சிலப்பதிகாரம் மூலம் கூறப்பட்டுள்ளதாக பரப்பப்படும் பாடல்களின் உண்மைத்தன்மையை விளக்குகிறது இத்தொகுப்பு.
விளக்கம்
கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்த துவங்கிய பிறகு கொரோனா வைரஸை தடுக்கும் மருந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் வருவதை கணித்து பாடல்களில் தெரிவித்து சென்ற தமிழ் சித்தர்கள், புலவர்கள் என பல பாடல்கள் சமூக ஊடகங்களில் மட்டுமின்றி செய்தி இணையதளங்களிலும் வெளியாகின. அப்படி வைரலான ஒவ்வொரு பாடல்களின் உண்மைத்தன்மை குறித்து ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
1.போகர் சித்தர் பாடல் :
” முருகன் காலடியில் தவழும் விஷப்பல் கொண்ட பாம்பினத்தை கொன்று உண்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். உடலில் ரோகம் பிடிக்கும் உடலின் நரம்பு மண்டலம் சர்வ நாசமடைந்து துர் மரணம் நிகழும் ” என பொருள்படும் பாடலை கி.மு 400 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் போகர் கூறியதாகப் பரப்பி வருகின்றனர்.
இந்த பாடலின் தொடக்கத்தை அறிந்து கொள்ள ஆராய்ந்த பொழுது ” வெங்கடேஷ் ஆறுமுகம் ” எனும் நகைச்சுவை நடிகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ” இப்படி நான் எழுதுவதை எல்லாம் அப்படியே நம்பி.. அதைத் தேடி ஆராய்ச்சி வேற செய்யுறிங்களே! யாரு சாமி நீங்கல்லாம் ?” என செய்தித்தாள் போன்ற பக்கத்தில் வெளியான சித்தர் பாடலை பதிவிட்டு இருக்கிறார்.
ஜனவரி 29-ம் தேதி வெங்கடேஷ் ஆறுமுகம் தன் முகநூல் பக்கத்தில் அதே பதிவை பதிவிட்டு இருந்துள்ளார். எனினும், அந்த பதிவின் இறுதியில் ” இந்த பதிவை பிளாக் மாம்பா நாகம் போல் அதிவேகமாக ஷேர் செய்யவும் ” என கிண்டல் செய்துள்ளார்.
இதற்கு முன்பாக வெங்கடேஷ் ஆறுமுகம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் நையாண்டித்தனமான பதிவுகள் மற்றும் மக்கள் நம்பி பரப்பும் தவறான பதிவுகள் தொடர்பாக கிண்டல் செய்து பதிவிட்டு வந்துள்ளார். உதாரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கண்டு நாசா வியந்ததாக அவர் பதிவிட்ட ஓர் கிண்டல் பதிவு சமூக வலைதளங்களில் பரவி செய்தி இணையதளத்திலும் கூட வெளியாகியது. அது தொடர்பாகவும் யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : #நாசா_வியந்தது என வைரலாகும் மீனாட்சி அம்மன் கோவில் பதிவு|உண்மை என்ன ?
கொரோனா வைரஸ் தொடர்பாக சித்தர் போகர் எழுதிய பாடல் என வெளியிட்ட பதிவு குறித்து வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களிடம் யூடர்ன் ஆசிரியர் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” இதை கொரோனா வைரஸ் தொடர்பாக திருமூலர் எழுதிய பாடல் என ஒருவர் பதிவிட்டு இருந்தார். இப்படியெல்லாம் கிரியேட் செய்கிறார்களே, அப்போ யார் வேணா என்ன வேணா எழுதலாம் என நான் அப்படி பதிவு போட்டேன். அப்படி பதிவிட்டதில் இது போகர் காலத்து தமிழே இல்லை என கமெண்ட் செய்தனர். இது தவறான செய்தியை பரப்பனும் என்பதற்காகவோ அல்லது குழப்பத்தை ஏற்படுத்தனும் என்பதற்காகவோ பதிவிடவில்லை. எதை எழுதினாலும் மக்கள் நம்பி விடுவார்களா என ஒரு கோபத்தில் எழுதியது தான் ” எனக் கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக திருமூலர் எழுதியதாக யாரோ ஒருவர் தவறான செய்தியை பரப்புகிறார், இதையெல்லாம் மக்கள் நம்புகின்றனர் என்பதற்காக அப்பாடலை நையாண்டித்தனமாக தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
2. சிலப்பதிகாரம் பாடல் :
சிலப்பதிகாரத்தில் 4-வது அத்தியாயத்தில் 3-வது பத்தியில் வரும் பாடலில் கொரோனா வைரஸ் குறித்து இடம்பெற்று இருப்பதாக மேற்காணும் பாடல் அதிகம் வைரல் செய்யப்பட்டது. அந்த பாடலை பண்டைய கால பாடலை போல் இல்லை. மேலும், 3 காண்டங்களையும், 30 காதைகளையும் கொண்ட சிலப்பதிகாரத்தில் 4-ம் அத்தியாயம் எங்கிருந்து வந்தது. இதில் மூன்றாம் பத்தி வேற. கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேள்வி கேட்பதாக குறிப்பிட்டு உள்ளார்கள். மதுரை காண்டத்தில் கண்ணகி குறித்த பாடல்களில் அப்படியொரு பகுதியே இல்லை.
3. அகத்தியர் பாடல் :
” சர்ப்பமுண்டு சர்வ நோயுமுண்டு கர்ப்பமறியா கன்னியும் வாயு பகவான் பகைகொண்டு பித்தம் சித்தம் சிதை கொள்வாள் ” எனும் பாடலை அகத்தியர் எழுதியதாக பரப்பி வருகின்றனர். பொதுவாகவே அகத்தியர் எழுதிய பாடல்கள் என உலாவும் பாடல்களில் பல பாடல்கள் அகத்தியர் எழுதியதே இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்த பாடலை அகத்தியர் தான் எழுதினாரா என்பதை தேடி உறுதி செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது.
மேலும், சித்தர்களின் பாடலுக்குரிய நடையிலேயே இப்பாடல் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால், இது குறித்து ஆழமான ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவையில்லை.
இப்படி யாரோ ஒருவர் தனக்கு தெரிந்த பாடலை சித்தர்கள் எழுதியதாக அல்லது பண்டைய தமிழ் புலவர்கள் எழுதியதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனுடன் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்ற வசனத்தையும் இணைத்து விடுகிறார்கள். கிண்டலுக்காக செய்தார்களா அல்லது அறியாமல் உண்மை என பகிர்ந்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால், கொரோனா தொடர்பாக போகர், அகத்தியர், சிலப்பதிகாரம் என வரும் தமிழ் பாடல்கள் ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.