கொரோனாவிற்கு ஈழத்தமிழ் பெண் தடுப்பு மருந்து கண்டுபிடித்தாரா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
சீனாவில் வுஹான் பகுதியை மையமாகக் கொண்டு பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் (2019 nCoV) உலகம் முழுவதும் அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் வகை குடும்பத்தில் புதிய வகையான நோவல் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈழத்தமிழ் பெண் ஒருவர் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து உள்ளதாக ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் முகநூல் பக்கத்தில் வைரஸ் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள். அந்த பதிவு 15 ஆயிரம் ஷேர்களை பெற்று வைரலாகியதோடு, கமெண்ட்களில் வாழ்த்துகள் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.
2019 nCoV கொரோனா வைரஸ் தடுப்புக்காக மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றுவரை அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், சிகிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மட்டுமே தடுப்பு மருந்தாக நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸிற்கு ஈழத்தமிழ் பெண் மருத்துவரோ அல்லது பிற நாட்டு மருத்துவர்களோ தடுப்பு மருந்து கண்டுபிடித்ததாக செய்திகளோ அல்லது விவரங்களோ கிடைக்கவில்லை. ஈழத்தமிழ் பெண் என காண்பிக்கப்பட்டு இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கும் பொழுது புகைப்படம் தொடர்பான விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
வைரலாகும் புகைப்படத்தில் ” வணக்கம் jaffna ” எனும் பெயர் இடம்பெற்று இருத்தது. எனினும், அந்த பெயரில் உள்ள இணையதளம் குறித்த சரியான தகவலும் இல்லை. வைரலாகும் பதிவில் ஈழத்தமிழ் கொரோனா வைரஸிற்கு எந்த மாதிரியான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார், அது குறித்து விவரங்கள், அவரின் பெயர் என ஏதும் வெளியிடாமல் புகைப்படத்தை மட்டும் வைத்து பதிவிட்டு உள்ளனர். இதை தெரியாமல் பதிவிட்டார்களா அல்லது நையாண்டிக்காக தெரிந்தே பதிவிட்டார்களா எனத் தெரியவில்லை.
மேலும் படிக்க : சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது அமெரிக்க சதியா ?
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு தவறான தகவல். ஈழத்தமிழ் பெண் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து உள்ளதாக ஆதாரமில்லாத தகவலை பரப்பி வருகிறார்கள். ஆகையால், தவறான செய்தியையும், புகைப்படத்தையும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.