கொரோனா வைரசிற்கு யுனிசெப் வழங்கிய ஆலோசனை உண்மையா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 எனும் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வைரசால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது வேதனை அளிக்கிறது.
இந்நிலையில், யுனிசெப் அமைப்பு கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்ட ஆலோசனை என ஓர் தகவல் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரல் தகவலை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். கொரோனா வைரஸ் குறித்து யுனிசெப் அமைப்பு வெளியிட்டதாக வைரலாகும் தகவல் உண்மையா என ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் அல்லது யுனிசெப் எனும் அமைப்பு 190 நாடுகளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதுகாக்கவும் மற்றும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெடிக்கத் தொடங்கிய உடனே உலக சுகாதார அமைப்பு வைரஸ் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
யுனிசெப் அமைப்பும், ” Coronavirus disease (COVID-19): What parents should know ” என்ற தலைப்பில் வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு குறித்து விரிவான ஆலோசனைகளை வெளியிட்டு இருந்தது. அதேபோல், 2020 மார்ச் 2-ம் தேதி வெளியான ” Spreading facts, not fear, in the fight against Coronavirus ” எனும் கட்டுரையில் இந்தோனேசியாவில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் அச்சங்கள் குறித்து வெளியாகி இருக்கிறது.
யுனிசெப் வெளியிட்ட ஆலோசனையில், சமூக ஊடகங்களில் வைரலாகியது போன்ற தகவல்கள் இடம்பெறவில்லை. எனினும், சோப்பினைக் கொண்டு குழந்தைகள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற ஆலோசனை இடம்பெற்று இருக்கிறது. இந்த சுகாதார ஆலோசனையை உலக சுகாதார அமைப்பும் தெரிவித்து இருந்தது. வைரஸ் பாதித்தவரின் எச்சில் மூலம் வைரஸ் பரவும் என்பதால் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அடிக்கடி சோப்பினை பயன்படுத்தி கைகளை கழுவ அறிவுறுத்தி இருந்தனர்.
தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாவது போன்ற ஆலோசனையை யுனிசெப் வழங்கியதாக யுனிசெப் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது செய்தியிலோ தகவல் இல்லை.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகளின்படி, இருமல் மற்றும் தும்மலில் இருந்து வரும் சிறிய நீர்த்துளிகள் மூலமும் கோவிட்-19(கொரோனா வைரஸ்) பரவும் எனக் கூறப்படுகிறது. வைரஸின் நடத்தை குறித்த தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஒரு மேற்பரப்பில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 மணி நேரங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குளிர்ந்த உணவுகள் அல்லது ஐஸ்கிரீம் உள்ளிட்டவையை உண்ணக் கூடாது என்பதெல்லாம் வதந்தியே. மாஸ்க் அணிவது வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் என உறுதியாக கூறப்படவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
யுனிசெப் அமைப்பானது கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்ட ஆலோசனை என தவறான தகவல்கள் வைரலாகி வருகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.