கொரோனா வார்டுக்குள் சென்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் எனத் தவறான தகவலைப் பேசிய உதயநிதி !

பரவிய செய்தி
கொரோனா வார்டுக்குள் பாதுகாப்பு உடை அணிந்து சென்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் – உதயநிதி ஸ்டாலின்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் நடைபெற்ற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திருச்சியில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது, ” உள்ளாட்சித் தேர்தலிலும் 100% வெற்றி பெற வேண்டும். 8 மாத காலமாக திமுக ஆட்சி செய்த சாதனைகளை கூறவே நான் வந்துள்ளேன். கொரோனா இரண்டாம் அலையின் மோசமான நிலையின் போது, இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் கொரோனா வார்டுக்குள் பாதுகாப்பு உடை அணிந்து சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் நமது தலைவர் ” எனப் பேசி உள்ளார்.
#உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி #Trichy @KN_NEHRU @Anbil_Mahesh pic.twitter.com/yuW8Y2Ii2k
— Udhay (@Udhaystalin) February 9, 2022
உண்மை என்ன ?
2021 மே 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் உள்ள ESI மருத்துவமனையில் PPE பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகள் உள்ள வார்டை பார்வையிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகியது.
மேலும் படிக்க : கோவையில் முதல்வர் விசிட்: அதிர்ந்த ட்விட்டர், பரவிய வதந்திகள். முழு தொகுப்பு !
அப்போது, முன்னணி செய்தி ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும் நாட்டிலேயே முதல் முறையாக ஒரு முதல்வர் கொரோனா வார்டிற்குள் சென்றதாக வெளியிட்டனர். ஆனால், அது தவறான தகவல் என அப்போதே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டிற்குள் நோயாளிகளை காண செல்வதற்கு முன்பாகவே கோவா, தெலங்கானா முதல்வர்கள் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து இருக்கிறார்கள். மேலும், மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டிற்குள் சென்ற அதே நாளில் சிக்கிம் முதல்வரும் பாதுகாப்பு உடை உடன் நோயாளிகளை சந்தித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், இந்தியாவில் கொரோனா வார்டுக்குள் பாதுகாப்பு உடை அணிந்து சென்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் என எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசிய தகவல் தவறானது. மு.க.ஸ்டாலினுக்கு முன்பே சில முதல்வர்கள் கொரோனா நோயாளிகளை சந்தித்து உள்ளனர் என அறிய முடிகிறது.