ராகவேந்திரா மண்டபம் பராமரிப்பில் இருப்பதாக லதா ரஜினிகாந்த் கூறினாரா ?

பரவிய செய்தி
ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது – லதா ரஜினிகாந்த்
மதிப்பீடு
விளக்கம்
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தனி வார்டுகள் நிரம்பி உள்ளன. இதனால், சென்னையில் உள்ள திருமண மண்டபங்களை கொரோனா வார்டாக பயன்படுத்த வழங்குமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதற்குள், ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எந்தவித நிகழ்ச்சியும் நடைபெறாது என லதாரஜினிகாந்த் கூறியதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாற்றி யோசி எனும் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட மீம் பதிவு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. ஆகையால், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
” சென்னையில் உள்ள 747 திருமண மண்டபங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நோட்டீஸ் : 50,000 படுக்கைகள் தயாராகியது : ஆணையர் பிரகாஷ் பேட்டி ” என்ற தலைப்பில் இந்து தமிழ் திசையில் மே 3-ம் தேதி வெளியான செய்தி கிடைத்தது. அதேபோல், சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் 500 திருமண மண்டபங்களை மாநகராட்சி தயார் நிலையில் வைத்து உள்ளதாக மே 4ம் தேதி தினகரனில் வெளியான செய்தியும் கிடைத்தது.
இதையடுத்து, லதாரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபம் குறித்த பேசி இருந்தாரா என தேடிப் பார்க்கையில் கலைஞர் செய்தி இணையதளத்தில் அதை செய்தியாகவும், சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் வெளியிட்டு இருந்தனர்.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான செய்தியில், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா வார்டாக பயன்படுத்த வழங்க முன்வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது என வெளியாகியது.
ஆனால், அந்த முடிவில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்கி உள்ளதாக கலைஞர் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், பிற செய்திகளில் லதாரஜினிகாந்தி கூறியதாக பரப்பப்படும் தகவல் வெளியாகவில்லை.
மாற்றி யோசி முகநூல் பதிவில் செய்தி ஆதாரமாக FX16 செய்தியின் பதிவை பதிவிட்டு இருந்தனர். ஆனால், FX16 செய்தியின் ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் அப்படியான செய்தி ஏதும் இடம்பெறவில்லை. ராகவேந்திரா மண்டபம் பராமரிப்பு பணியில் இருப்பதாக லதாரஜினிகாந்த் கூறினார் என எந்த அதிகாரப்பூர்வ ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. toptamilnews, கலைஞர் செய்திகள் தவிர்த்து வேறெங்கும் அப்படியான தகவல் இடம்பெறவில்லை.
இந்நிலையில், கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்; பராமரிப்பு பனியால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது என ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், முன்பு லதாரஜினிகாந்த் பேச்சுக்கு எழுந்த சர்ச்சையால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மீண்டும் தவறாக மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
முடிவு :
நம்முடைய தேடலில், கொரோனா சிகிச்சைக்கு தர மறுக்க ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என லதாரஜினிகாந்த் கூறியதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.