ஊழலற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 43-வது இடமா ?

பரவிய செய்தி
ஊழல் அற்ற நாடுகளின் பட்டியலில் 104-வது இடத்தில் இருந்து 43-ம் இடத்தில் முன்னேறி இடம்பிடித்த இந்தியா – உலகச் செய்திகள்
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் என்கிற வார்த்தைகள் அடிக்கடி கேட்டு பழகிப் போனவையே. இந்தியாவில் ஊழல் குறைந்து உள்ளதாகவும், ஒரே ஆண்டில் 104-வது இடத்தில் இருந்து 43-வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் ஓர் தகவல் முகநூலில் பகிரப்பட்டதை பார்க்க முடிந்தது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது எனலாம். ஆனால், அவற்றின் அளவு ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது.
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட ” ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ” என்கிற அரசுசாரா அமைப்பானது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஊழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு நாட்டிற்கு மதிப்பெண் வழங்குகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் பூஜ்யம் (மிகவும் ஊழல் நிறைந்த) முதல் 100 வரை (ஊழல் அற்ற) மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.
அரசு அலுவலங்கள், பொது வணிக நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாக கொண்ட பட்டியல் தயாராகிறது. அந்த அமைப்பு வெளியிடும் ஊழல் குறியீடு பட்டியல் (CPI) மூலம் ஊழல் மிகுந்த நாடுகள், ஊழல் குறைந்த நாடுகள் எவை என வரிசைப்படுத்தப்படுகிறது.
2019-ம் அண்டிற்கு இந்தியா 41 புள்ளிகளை பெற்று 80-வது இடத்தை பெற்றுள்ளதாக ஜனவரி 2020-ல் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்பாக, 2018-ம் ஆண்டில் இந்தியாவிற்கு 41 புள்ளிகள் வழங்கப்பட்டு 78-வது இடத்தில் இருந்தது. அதற்கு முன்பு, 2017-ல் 81-வது இடத்தில் இருந்தது.
180 நாடுகளில் டென்மார்க் 87 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் ஊழல் குறைந்த நாடாகவும், வெறும் 9 மதிப்பெண்கள் உடன் கடைசி இடத்தில் இருக்கும் சோமாலியா ஊழல் நிறைந்த நாடாக இடம்பெற்றுள்ளது. சீனா (80), இலங்கை (93), நேபாளம்(113), பாகிஸ்தான் (120), பங்களாதேஷ் (146) ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
இந்த அமைப்பால் வெளியிடப்படும் பட்டியல் ஊழல் குறித்த நாடுகளின் நிலையை அறிய நம்பக்கூடிய ஒன்றாகவும், பெரிய அளவில் பார்க்கப்படும் ஒன்றாகவும் உள்ளது. இதைத் தவிர்த்து, இந்தியா ஊழல் இல்லாத நாடுகளில் பட்டியலில் ஒரே ஆண்டில் 104-வது இடத்தில் இருந்து 43-வது இடத்திற்கு வந்ததாக அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை.
முடிவு :
நமது தேடலில், ஊழல் அற்ற நாடுகளின் பட்டியலில் 104-வது இடத்தில் இருந்து 43-ம் இடத்தில் முன்னேறி இடம்பிடித்த இந்தியா என பரவும் தகவல் தவறானது. ஊழல் குறித்து 2019-ம் ஆண்டு தர வரிசைப் பட்டியலில் இந்தியா 80-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.