This article is from Apr 25, 2020

கோவிட்-19 மனிதனால் உருவாக்கப்பட்டது என நோபல் பரிசு பெற்ற தாசுகு ஹொன்ஜோ கூறினாரா ?

பரவிய செய்தி

ஜப்பானின் நோபல் பரிசு பெற்ற மருத்துவப் பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்று கூறி இன்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 தொற்று நோய் இயற்கையாக உருவானது அல்ல, மனிதர்களால் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் எழுகின்றன. இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற டாக்டர் தாசுகு ஹொன்ஜோ கொரோனா இயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல என்று தெரிவித்து இருப்பதாக ஓர் ஃபார்வர்டு செய்தி இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

அதில், ” ஜப்பானின் நோபல் பரிசு பெற்ற மருத்துவப் பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்று கூறி இன்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது இயற்கையானதாக இருந்தால், உலகம் முழுவதையும் மோசமாக பாதித்து இருக்காது. ஏனென்றால், இயற்கையின் விதிப்படி, வெவ்வேறு நாடுகளில் வெப்பநிலை வேறுபட்டது. இது இயற்கையானது என்றால், சீனாவைப் போன்ற வெப்பநிலையைக் கொண்ட நாடுகளை மட்டுமே இது மோசமாக பாதிக்கும். மாறாக, இது சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில் பரவுகிறது, அதேபோல் இது பாலைவன பகுதிகளிலும் பரவுகிறது. ஒருவேளை இயற்கையாக இருந்தால், இது குளிர்ந்த இடங்களிலும் பரவியிருக்கும், ஆனால் வெப்பமான இடத்தில் இறந்து இருக்கும்.

நான் விலங்குகள் மற்றும் வைரஸ்கள் குறித்து 40 வருடங்கள் ஆராய்ச்சி செய்துள்ளேன். இது இயற்கையானது அல்ல. இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது மற்றும் முற்றிலும் செயற்கையானது. நான் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். அந்த ஆய்வகத்தின் அனைத்து ஊழியர்களையும் அறிவேன். கொரோனா வைரஸ் தோன்றிய பிறகு, அவர்களை தொடர்பு கொண்டு வருகிறேன். ஆனால், அவர்களின் தொலைபேசி 3 மாதங்களாக துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்பது இப்போது புரிகிறது ” சீன நாட்டினை குற்றம்சாட்டி இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ?

தாசுகு ஹொன்ஜோ எனும் பெயரைக் குறித்து தேடிய பொழுது, 2018-ல் ” எதிர்மறை நோயெதிர்ப்பு ஒழுங்குமுறையைத் தடுப்பதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையை கண்டுபிடித்ததற்காக ” உடலியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை தாசுகு ஹொன்ஜோ ஜேம்ஸ் உடன் பெற்றார்.

இதையடுத்து, தாசுகு ஹொன்ஜோ மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய வார்தைகளை கொண்டு தேடிய பொழுது சர்வதேச அளவிலான செய்திகள் எதிலும் வெளியாகவில்லை. உலகமே வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் அது குறித்து தீவிரமான அறிக்கையை வெளியிட்ட மருத்துவரின் தகவல் வெளியாகாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அப்படி எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

ஏப்ரல் 19-ம் தேதி நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வைராலஜிஸ்டும், மருத்துவருமான லூக் மோன்தக்னேர் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகக் கூறி இருந்தார். அந்த செய்தி உலக அளவில் வெளியாகியது. தமிழ் செய்திகள், சமூக ஊடங்களிலும் வெளியாகி இருக்கிறது.

ஆனால், LiveScience அறிக்கையின்படி, வுஹானில் உள்ள ஆய்வகத்தில் வைரஸ் தோன்றியதாக கூறும் குற்றச்சாட்டை அங்குள்ள ஆய்வகம் மறுக்கிறது. WIV-ன் துணை இயக்குனர் Zhiming Yuan, இந்த வைரஸ் எங்களிடம் இருந்து வந்ததற்கான எந்த வழியும் இல்லை ” என்று தெரிவித்து இருக்கிறார்.

kyodo news எனும் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், வைரஸ் தொற்று நோய்களைக் கண்டறிய ஜப்பான் பி.சி.ஆர் சோதனைகளை ஒரு நாளைக்கு 10,000-க்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும் ” என ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாசுகு ஹொன்ஜோ கூறியதாக கூறப்பட்டுள்ளது. தாசுகு ஹொன்ஜோ சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றவும் இல்லை.

முடிவு : 

நம் தேடலில், கோவிட்-19 சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது, அது இயற்கையானது அல்ல என்று நோபல் பரிசு பெற்ற தாசுகு ஹொன்ஜோ கூறியதாக பரவும் தகவல் போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader