வடஇந்தியாவில் வெயிலுக்கு மாட்டுச்சாணம் ஜூஸ் குடிப்பதாகப் பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
மாட்டு சாணி ஜுஸ் 50ரூபாய் வட தேஸ மாநிலங்கள் மானுட சமூகத்தை விட்டு விலகி மிருகங்களை விட இழிவாகப் போய்க் கொண்டிருக்கின்றன! நமது தேசத்தின் நிலைமையை அறிந்து சிரிப்பதா பரிதாபப்படுவதா?
மதிப்பீடு
விளக்கம்
யோகி ஆதித்யநாத் பதவியேற்றதுமே பசுமாட்டு கோமியத்தை ஆரோக்கிய பானமாக அறிவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அதை பாட்டில்களில் ஆரோக்கிய பானமாகவும் விற்பனை செய்யும் இத்திட்டத்தை செயல்முறைப்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது வடநாட்டினர் மாட்டுச்சாணம் ஜூஸ் அருந்துவதாகவும், அது ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பதாகவும் கூறி, மாட்டுச்சாண ஜூஸ் தயாரிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் மாட்டுச்சாண உருண்டையை தண்ணீர் ஊற்றி மக்கள் வாங்கிக் குடிப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த வெயிலை சமாளிக்க மாட்டு சாணி ஜூஸ் ஒரு லிட்டர்
₹ 50.🤓🤓🤑🤑 pic.twitter.com/UDTTz6uoUv— Jainudeen (@Maricar1963) May 14, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், உணவு வகைகள் குறித்து வீடியோக்கள் வெளியிடும் பல யூடியூப் சேனல்கள் இதுபோன்ற பல வீடியோக்களை வெளியிட்டு இருந்ததை காண முடிந்தது.
அதில், Foodie Incarnate என்னும் யூடியூப் சேனல் 2022 ஜூலை 30 அன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதை போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவின் தலைப்பில் “3000 ஆண்டுகள் பாரம்பரியமான பண்டைய இந்திய உணவின் செய்முறை, பாங் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பாருங்கள், தனித்துவமான இந்திய சாலையோர உணவு” என்று குறிப்பிடப்பட்டதோடு, வீடியோவின் விளக்கத்திலும் “பாங் பானம் தயாரித்தல். பாங் பானம் செய்முறை. சிவராத்திரி பாங். இந்தியாவில் பாங் செய்முறை. டெல்லியின் சாலையோர உணவு. உத்தரபிரதேச சாலையோர உணவு. பாங் தேகா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் வைரல் செய்யப்படும் வீடியோவில் உள்ள YourBrownFoodie எனும் வாட்டர் மார்க் குறித்து தேடுகையில், 2023 மே 1ம் தேதி Your Brown Foodie எனும் யூட்யூப் சேனலில், “மதுராவில் பாங் ” என்ற தலைப்பில் வைரல் செய்யப்படும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் இது மாட்டுச்சாண ஜூஸ் இல்லை என்பதையும், பாங் எனப்படும் பானம் எப்படி செய்வது என்பது குறித்த செய்முறை வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
பாங் என்பது தடை செய்யப்பட்ட பானமா ?
பொதுவாக, பாங் பானம் (Bhaang Drink) எனப்படும் பாரம்பரிய பானம் வடஇந்தியாவில் சிவராத்திரி பண்டிகையின் போது அருந்தப்படுவதோடு, ஹோலி பண்டிகையின் போது அருந்தப்படும் பிரபலமான பானங்களில் ஒன்றாகவும் (பாங் தண்டாய்) பார்க்கப்படுகிறது. இதனை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.
இந்தியா 1985 ஆம் ஆண்டில் போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தை இயற்றியது. இதன்படி கஞ்சா செடியை உட்கொண்டால் ரூ.10,000 வரை அபராதமும் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவித்தது.
எனவே பாங் எனப்படுவது கஞ்சாவைப் போன்ற ஒருவகை போதை பொருள் என்று சொல்லப்பட்ட நிலையில், இதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், டைம்ஸ் ஆப் இந்தியா இது குறித்து 2022 ஆகஸ்ட் 30 அன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “கர்நாடக உயர்நீதிமன்றம் பாங் பானம் என்பது Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட பானமாக வராது என்று குறிப்பிட்டதோடு, பீகாரைச் சேர்ந்த குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த கட்டுரையில் “பாங் ஒரு பாரம்பரிய பானம் என்பதைக் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான மக்கள் இதை வடஇந்தியாவில், குறிப்பாக சிவன் கோவில்களுக்கு அருகில் குடிப்பார்கள், மேலும் இது மற்ற எல்லா பானங்களைப் போலவே லஸ்ஸி கடைகளிலும் கிடைக்கிறது. அது தவிர பாங், பிராண்டட் பெயர்களுடன் சந்தையில் விற்கப்படுகிறது. எனவே, இந்த பாங் கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் தடய அறிவியல் ஆய்வக அறிக்கை வரும் வரை, நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது” என்று நீதிபதி நடராஜன் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோமியம் குடிப்பதால் கொரோனா வராது என்ற பாஜக எம்பி சாத்வி பிரக்யாவிற்கு கொரோனா !
இதற்கு முன்பும் கோமியம் குடிப்பதால் கொரோனா வராது என பாஜகவினரால் தவறாக செய்திகள் பரப்பப்பட்டது குறித்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: கொரோனாவிற்கு கோமியம், அப்பளம் என பாஜக தலைவர்கள் சொன்ன பலே யோசனைகளின் தொகுப்பு !
முடிவு:
நம் தேடலில், மாட்டுச்சாணம் ஜூஸ் குடிக்கும் வடநாட்டினர் என சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வரும் தகவல் தவறானது என்பதையும், அது பாங் பானம் (Bhaang Drink) குறித்த வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.