This article is from Aug 07, 2018

பசுவிற்கு விஷம் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா ?

பரவிய செய்தி

“ பசு “ எதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். “ 90 நாட்கள் “ பசுவிற்கு தினமும் அந்த விஷத்தை கொடுத்துவிட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள். விஷத்திற்கான எந்தவொரு தடயமும் அந்த பாலில் இல்லை. அந்த விஷம் பசுவின் தொண்டைக் குழியில் இருப்பதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதிப்பீடு

சுருக்கம்

பசுவிற்கு விஷத்தன்மை கொண்ட உணவுகளை கொடுத்து எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளவில்லை, விஷத்தன்மை உடைய உணவுகள் கொடுப்பது அனுமதிக்கப்படாத ஒன்று.

விளக்கம்

கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கி நாகரீக வளர்ச்சி அடைந்த காலத்திலேயே பல விலங்குகளுடன் ஒன்றி வாழத் தொடங்கினர் இந்தியர்கள். அதில், தனித்துவமானது பசுக்கள். தினந்தோறும் பால் கொடுப்பதோடு பல விதங்களிலும் பயனுள்ளதாக உள்ளன.

அதே நேரத்தில், சமீப இந்தியாவில் பசுக்கள் பற்றிய ஏதோ ஒரு செய்தி அவ்வபோது வந்துக் கொண்டே இருக்கிறது. அதிலும், பசுக்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன, பசு நெய் ஆக்சிஜனை உருவாக்கும் என்பதில் தொடங்கி தற்போது பசுக்கள் விஷத்தை உண்டாலும் அவைகளுக்கு ஒன்றுமே ஆகாது என்ற வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளது.

செய்தி : ஒரு பசுவிற்கு 90 நாட்களுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட அளவு விஷத்தன்மை உடைய உணவை அளித்து எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி குழு தொடர் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில், பசுவின் பால், சிறுநீர், இரத்தம், சாணம் போன்ற எதிலும் விஷத்தன்மை ஏதுமில்லை. மேலும், ஆராய்ந்ததில் வழங்கிய விஷம் பசுவின் தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. வேறு எந்தவொரு பசுவிற்கும் இல்லாத தனித்துவம் இது.

பதில் : எய்ம்ஸ் சார்பில் பசுவிற்கு விஷத்தன்மை உடைய உணவுகளை கொடுத்து எந்தவொரு பரிசோதனையும் நடைபெறவில்லை என எய்ம்ஸ்-யை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர். முதலில் பசுவிற்கு விஷம் கொடுப்பதற்கே “The Institute’s Animal Ethics Committee  “ அனுமதிக்கமாட்டார்கள். இதில், 90 நாட்களுக்கு எவ்வாறு விஷம் அளித்து பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

செய்தி : பசுக்கள் மட்டுமே ஆக்ஸிஜனை உள்ளிழுத்து சுவாசித்து ஆக்ஸிஜனையே வெளியிடுகிறது.

பதில்: தாவரங்களை தவிர எந்தவொரு விலங்குகளாலும் ஆக்ஸிஜனை வெளியிட முடியாது. உள்ளிழுக்கும் காற்றில் பயன்படாத ஆக்ஸிஜன் மட்டுமே வெளியிட முடியும். விலங்குகளின் நுரையீரலுக்கு அமைப்பு உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை முழுவதுமாக வெளியேற்றக்கூடிய திறன் இல்லை.

செய்தி : 10 கிராம் பசு நெய்யை தீயில் ஊற்றினால் 1 டன் அளவிற்கு ஆக்ஸிஜன் உருவாகும்.

பதில் : இது முற்றிலும் இயற்பியல் விதிக்கு எதிரானது. ஒரு பணியில் 10 கிராமை கொண்டு 1,000 கிலோ கிராமை உருவாக்க முடியாது.

பசுவின் சிறப்பு என்று புதிதுபுதிதாக ஏதோவொரு தகவல் சிலரால் வெளியாகி மக்களை நம்ப வைக்க முயற்சிக்கப்படுகிறது. இந்த தகவல்கள் அறிவியல் ரீதியாக தவறானவையாக உள்ளன. இதற்கெல்லாம் அவர்களிடத்தில் ஆதாரம் ஏதுமில்லை.

பசுக்கள் புனிதமானவையே..! ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு அடுத்ததாக பசுவின் பாலே உகந்ததாக இன்றுவரை திகழ்கிறது. ஆகையால், பசுக்கள் போற்றப்பட வேண்டியவை. ஆனால், வீண் வதந்திகளால் அல்ல. பசுக்கள் பற்றி இணையத்தில் பரவும் முழுமை பெறாத செய்திகள் எதையும் மக்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. எந்த செய்தியாக இருந்தாலும் சரியான தகவல்கள் இல்லாத செய்திகளை பரப்புவதால் தேவையற்ற நம்பிக்கை உருவாக வாய்ப்புகள் அதிகம்.

நன்றி THE HINDU

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader