இந்திய ராணுவத்திற்கு எதிராக சிபிஐ(எம்) போராடியதாக முகநூல் வதந்தி !

பரவிய செய்தி
இந்திய ராணுவத்தை அவமதிப்பு செய்யும் கம்யூனிஸ்டை தடை செய்ய வழக்கு போடுங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (மார்க்சிஸ்ட்) சேர்ந்தவர்கள் இந்திய தேசிய ராணுவத்திற்கு எதிராகவும், சீனாவிற்கு ஆதரவாகவும் பதாகைகளை கழுத்தில் ஏந்தி போராடுவதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப்புகைப்படங்களை பகிர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் தடை செய்ய வழக்கு போடுங்கள் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
கம்யூனிஸ்ட் கட்சி சீனாவிற்கு ஆதரவாக, இந்திய ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் ” Indian Army Down Down.. We support To china.. Zindabad ” என்ற வாசகம் ஃபோட்டோஷாப் மூலம் செய்யப்பட்டவை. வைரலாக்கப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் ஜூன் 16-ம் தேதி CPI(M) உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உண்மையான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
All India Protest against Modi govt’s anti-people policies.#PeopleProtestModiGovt pic.twitter.com/oJRUqXHsN5
— CPI (M) (@cpimspeak) June 16, 2020
உடனடியாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 7,500 பணப் பரிமாற்றம், இலவசமாக உணவு வழங்கல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத்தின் நோக்கத்தை மறு மதிப்பீடு செய்தல் மற்றும் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துபோகச் செய்வதை நிறுத்துவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 16-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (மார்க்சிஸ்ட்) சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டத்தை நடத்தி உள்ளனர்.
ஜூன் 17-ம் தேதி டெலிகிராப் இந்திய செய்தியில் போராட்டத்தில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் கட்சித் தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் பங்கேற்றதாக புகைப்படத்துடன் கூறப்பட்டுள்ளது. பிருந்தா காரத் கையில் ஏந்திய பதாகையில் ” தேவைப்படும் மக்களுக்கு 6 மாதம் இலவசமாக 10 கிலோ உணவுப் பொருளை வழங்க வேண்டும் ” என இடம்பெற்று உள்ளது.
முடிவு :
நம்முடைய தேடலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய ராணுவத்திற்கு எதிரான பதாகையுடன் சீனாவிற்கு ஆதரவாக போராடியதாக வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை. தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய புகைப்படத்தில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்களை மாற்றியுள்ளார்கள் என அறிய முடிகிறது.