CPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா ?

பரவிய செய்தி
தேர்தல் நடைபெறுவதால் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற வேட்பாளர் க.வெங்கடேசன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு.
மதிப்பீடு
விளக்கம்
2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்கான தேர்தல் நாள் ஏப்ரல் 18 என கூறப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் ஓட்டு செலுத்த மக்கள் செல்ல வாய்ப்பில்லை என்பதால் திருவிழாவிற்கு தடை விதிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறியதாகவும், இதற்காக வழக்கு தொடுத்து உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு CPIM தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அதில், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், மதுரை சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை மட்டுமின்றி திருவிழாவிற்கு வர வாய்ப்புள்ள மக்களின் தொகுதிக்கும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதே தங்களின் நிலைபாடு என கூறியுள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கவோ, தடை விதிக்கவோ கம்யூனிஸ்ட் வேட்பாளர் க.வெங்கடேசன் கூறவில்லை. தேர்தல் களம் என்பதால் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
மீண்டும் வதந்தி :
மதுரையில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பெயரை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வேட்பாளர் பற்றிய அவதூறுகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் வேட்பாளர் இந்துக்களுக்கு எதிராக பேசுவது போன்று பரப்புகின்றனர். முன்பு சித்திரை திருவிழா, தற்போது சிக்கந்தர்மலை கார்த்திகை தீப விழாவிற்கு தடை என பேசியதாக செய்தி சேனல்களின் பெயரில் ஃபோட்டோஷாப் செய்து வதந்திகளை பரப்பியுள்ளனர்.