‘இது கிரிக்கெட் மாஃபியாவான பிசிசிஐ-க்கு எதிரான வெற்றி’ என ரிக்கி பாண்டிங் கூறியதாகப் பரவும் வதந்தி!

பரவிய செய்தி
இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான நீதியின் வெற்றி. உங்களுடைய பணமும் அதிகாரமும் உலகக்கோப்பையை உங்களுக்கு பெற்றுத் தரவில்லை. – ரிக்கி பாண்டிங்
மதிப்பீடு
விளக்கம்
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த நவம்பர் 19 அன்று நடந்து முடிந்த ‘உலகக்கோப்பை கிரிக்கெட் 2023’ இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறை உலகக்கோப்பையை வென்ற நாடு என்ற சாதனையை பெற்றது ஆஸ்திரேலியா.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான நீதியின் வெற்றி. உங்களுடைய பணமும், அதிகாரமும் உலகக்கோப்பையை உங்களுக்கு பெற்றுத் தரவில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் Fox Cricket தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாக சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியை மாஃபியா என வர்ணித்து உள்ளார்
முள்ளால் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் ..
பணத்திற்காக ஐபிஎல் மேட்ச் நடத்தி இந்த கெட்டப் பெயரை இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ளது .. pic.twitter.com/qlIUThGsaB
— தடா ஜெ ரஹிம் 🇮🇳 (@tadarahim7) November 20, 2023
ஆஸ்திரேலிய அணியின் வெற்றி “கிரிக்கெட் மாஃபியா” விற்கு எதிரான நீதியின் வெற்றி!
உங்களின் பணமும் அதிகாரமும் உங்களுக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தராது என @BCCI @JayShah வை தாக்கிய ரிக்கிபாண்டிங்.@FoxCricket க்கு அளித்த பேட்டி. pic.twitter.com/ZbNZpC0HMX
— வேலூர் சரவணன்🖤❤️ (@SaraVellore) November 20, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ரிக்கி பாண்டிங் கூறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறானவை என்பதை அறிய முடிந்தது.
கிரிக்கெட் தொடர்பான செய்திகளை வெளியிடும் Fox Cricket ஊடகத்தின் வலைத்தளப் பக்கத்தில் ரிக்கி பாண்டிங் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகள் குறித்து தேடுகையில், “ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாகன் மற்றும் நாசர் ஹுசைன் ‘ஆடுகளம்’ சரியாக அமையாததே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.” என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 20 அன்று ஒரு செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், “இந்த ஆடுகளமானது இன்று மிகவும் துணைக் கண்டத்திற்கான தன்மைகளையேக் (சுழல் பந்து வீச்சுக்கான ஆடுகளத்தின் தன்மை) கொண்டுள்ளது. விக்கெட் எடுக்க முயன்றதற்கான சூழல் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது, நியாயமான ஒன்று தான்.” என்று ரிக்கி பாண்டிங் தன்னுடைய கிரிக்கெட் கமெண்டரியின் போது பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் எந்த இடத்திலும் “இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான நீதியின் வெற்றி” என்று ரிக்கி பாண்டிங் கூறியதாகக் குறிப்பிடப்படவில்லை.
மேலும் ரிக்கி பாண்டிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் ஆய்வு செய்து பார்த்ததில், அவர் இது குறித்து எந்த செய்திகளையும் பகிர்ந்திருக்கவில்லை. அதேபோல், Fox Cricket எக்ஸ் பக்கத்திலும் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க: உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடி மைதானத்தில் ஊர்வலம் போனதாகப் பரவும் பழைய வீடியோ !
இதற்கு முன்பும் ‘கிரிக்கெட் உலகக்கோப்பை 2023’ குறித்து பரவிய தவறான செய்திகளை ஆய்வு செய்து, நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் போது ரசிகர்கள் அனுமன் சாலிசா பாடியதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ
மேலும் படிக்க: இன்ஸ்டாகிராமில் ஆஸ்திரேலியா வீரர் ட்ரவிஸ் குடும்பத்தினர் மீது குவியும் அருவருப்பான கமெண்ட்கள் !
முடிவு:
நம் தேடலில், “ஆஸ்திரேலியாவின் வெற்றி கிரிக்கெட் மாஃபியாவான பிசிசிஐ-க்கு எதிரான வெற்றி” என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.