மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என மொயின் அலி கூறினாரா ?

பரவிய செய்தி

மொயின் அலியின் ட்விட்டர் பதிவு. நபிகள் நாயகத்தை குறித்து இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் கிரிக்கெட் விளையாட இந்தியாவிற்கு செல்லமாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும், எனது சக முஸ்லீம் சகோதரர்களையும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.

மதிப்பீடு

விளக்கம்

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் தங்களின் கண்டனத்தை தெரிவித்தன. இந்த விவகாரத்தில் இந்தியா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்பு கத்தார் அறிக்கை வெளியிட்டும் இருந்தது.

இவ்விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டேன், ஐபிஎல் போட்டிகளையும் புறக்கணிக்கப் போவதாக இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு வீரர் மொயின் அலி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாக பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரலாகும் பதிவை வெளியிட்ட ட்விட்டர் பக்கம் @Moeen_Ali18, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கமே அல்ல. 2022 மே மாதம் உருவாக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ பக்கம் அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link

மேலும், மொயின் அலி பேரில் வைரலாகும் ட்வீட் பதிவை வெளியிட்ட ட்விட்டர் பக்கமும் தற்போது நீக்கப்பட்டு உள்ளது.

2020ல் தி கார்டியன் இணையதளத்தில், ” ஆன்லைனில் சக விளையாட்டு வீரர்களுக்கு தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வந்த போது சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறியதாக மொயின் அலி தெரிவித்து இருக்கிறார் ” என வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், முகமது நபிகள் பற்றி இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் கிரிக்கெட் விளையாட இந்தியாவிற்கு செல்லமாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader