தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையில் தமிழ்நாடு முதலிடமென சாணக்யாவில் பொய் தகவல் !

பரவிய செய்தி

பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையில் தமிழ்நாடு முதலிடம் – தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன்.

மதிப்பீடு

விளக்கம்

நேற்றைய தினம் (மே, 15ம் தேதி) சாணக்கியா யூடியூப் பக்கத்திற்குத் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் நேர்காணல் ஒன்றினை அளித்துள்ளார்.

Twitter link | Archive link

அதில், இந்தியாவில் மலக்குழி மரணங்கள் நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

உண்மை என்ன ? 

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் பேசியது தொடர்பான தரவுகளை இணையத்தில் தேடினோம். தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கையினை வெளியிட்டது. அதில், 2019 முதல் 2021ம் ஆண்டு வரை நிகழ்ந்த குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

வெங்கடேசன் அவர்கள் கூறியதன்படி கடைசி இரண்டு ஆண்டுகளான 2020 மற்றும் 2021ன் தரவுகளைப் பார்க்கையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் மக்களின் மீது அதிகப்படியாக 25,860 (12714 + 13146) குற்றச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் முறையே 14,541 (7017 + 7524) மற்றும் 14,113 (6899 + 7214) தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இப்பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2,651 (1274 + 1377) தாக்குதல்கள் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இத்தரவுகளை வெளியிட்டபோதே இது குறித்த கட்டுரையினை யூடர்னில் வெளியிட்டு இருந்தோம். இதிலிருந்து இந்தியாவிலேயே தலித்துக்கள் மீதான தாக்குதல் தமிழ்நாடு அதிகம் நடப்பதாகக் கூறிய தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : பட்டியலின மக்கள் மீதான தாக்குதலில் உத்தரப் பிரதேசம் முதலிடம் : 2021 என்.சி.ஆர்.பி அறிக்கை

மலக்குழி மரணங்கள் : 

மலக்குழி மரணம் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு அளித்த தகவலின்படி 1993ம் ஆண்டு முதல் 225 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என வெங்கடேசன் கூறியுள்ளார். 

இது குறித்து இணையத்தில் தேடியதில், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினர் சையத் ஜாபர் இஸ்லாம் என்பவர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இறப்பு குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகை குறித்தும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வலே பதில் அளித்துள்ளார். அதில், கைகளால் மலம் அள்ளியதால் எந்த மரணமும் நிகழவில்லை. ஆனால், பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

அதன்படி 1993ம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகப்படியாக 214 பேர் உயிர் இழந்துள்ளனர். அதில் 203 பேருக்கு நிவாரணமாக 10 லட்சமும், ஒருவருக்கு 10 லட்சத்திற்குக் குறைவான தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தரவினை கொண்டுதான் தமிழ்நாட்டில் அதிகப்படியான மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளது என வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

கைகளால் மலம் அள்ளும்போது இறக்கவில்லை. ஆனால், பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர்  தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்துத் தேடினோம். 

MANUAL SCAVENGERS சட்டம் 2013 : 

இந்தியாவில் மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றுவதை 2013ம் ஆண்டு தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் பிரிவு 2 உட்பிரிவு (1) கி-ல் Manual Scavenger குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Manual Scavenging Act 2013 – English

“இந்த சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, ஒரு தனிநபராலோ ஒரு உள்ளூர் அமைப்பாலோ, ஒரு நிறுவனத்தாலோ ஒரு கான்ட்ராக்டர் மூலமாகவோ, பணிக்கப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட ஒருவர், மனித கழிவுகள் முழுமையாக மக்குவதற்கு முன்பாக

– சுகாதாரமற்ற கழிவறைகள் அல்லது திறந்தவெளி வடிகால்களோ அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளிலிருந்து எடுக்கப்படும் கழிவுகளைக் கொட்டும் குழியிலிருந்தோ, ரயில் தண்டவாளங்களில் இருந்தோ, மத்திய அரசு அல்லது மாநில அரசு அறிவித்துள்ள இடங்களில் இருந்தோ 

கைகளால் சுத்தம் செய்வது, கைகளால் எடுத்துச் செல்வது, அப்புறப்படுத்துவது அல்லது வேறு வகையில் அவற்றைக் கையாள்வது போன்ற வேலைகளைச் செய்பவர்கள் Manual Scavenger என அழைக்கப்படுவர்.

விளக்கம் – 

a) “பணிக்கப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட” என்பது முழுநேரமாகவோ கான்ட்ராக்டர் அடிப்படையிலோ பணிக்கப்பட்டவர் அல்லது பணியமர்த்தப்பட்டவர்

b) மனிதக்கழிவுகளை இயந்திரங்கள் மூலமாகவோ, ஒன்றிய அரசு அறிவிக்கும் பாதுகாப்பு சாதனங்களுடன் சுத்தம் செய்பவரோ Manual Scavenger ஆகக் கருதப்பட மாட்டார்.”

அதாவது, மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்பவர் மட்டுமே Manual Scavenger. அந்நபரும் ஒன்றிய அரசு அறிவிக்கும் பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு சுத்தம் செய்பவரானால் அவர் Manual Scavenger-ஆகக் கருதப்பட மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைக் கொண்டுதான் கையால் மலம் அள்ளி யாரும் உயிர் இழக்கவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டி போன்றவற்றில் இறங்கிப் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதால் நிகழ்ந்த  உயிரிழப்புகளையும் மலக்குழி மரணமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

மலக்குழியில் ஒருவர் உயிர் இழக்கிறார் எனில் சமூக இயக்கங்களும், தலித் அமைப்புகளும் பெரும் போராட்டங்களை மேற்கொண்ட பிறகே மலக்குழி மரணமாகப் பதிவு செய்யப்படுகிறது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள சொற்ப விளக்கங்களைக் காரணம் காட்டி  மலக்குழி மரணங்களைச் சாதாரண மரணங்களாகப் பதிவு செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இந்நிலையில் வழக்குகள் முறையாகப் பதிவு செய்யப்படுகிறதா என்பது ஒரு கேள்வி. 

முன்னுக்குப்பின் முரணான தரவுகள் : 

கடந்த 6 ஆண்டுகளில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியில் துப்புரவுப் பணியாளர்கள் உயிர் இழந்தது தொடர்பாக 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அளித்த பதிலின்படி, உத்தரப் பிரதேசத்தில் 51 மரணங்களும், தமிழ்நாட்டில் 48 மரணங்களும் நிகழ்ந்துள்ளது. இவையே முதல் இரண்டு மாநிலங்கள்.

அதிலும் குறிப்பாக 2020, 2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகப்படியாக 14 (9 + 5) மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கேள்வியினை 2022, டிசம்பர் மாதமும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதும் அதே அமைச்சரகம் அளித்த பதிலில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகள் முறையே தமிழ்நாட்டில் 9 மற்றும் 8 மரணங்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஜூலையில் அளிக்கப்பட்ட பதிலுக்கும், டிசம்பரில் அளிக்கப்பட்ட பதிலுக்கும் வேறுபாடுகள் இருப்பதைக் காண முடிகிறது.

இத்தகைய வேறுபாடு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி உத்தரப் பிரதேச மாநிலத்திலும் உள்ளது. ஜூலை அளிக்கப்பட்ட 2019ம் ஆண்டு தரவில் 26 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பரில் அளித்த பதிலில் 28 என்றுள்ளது. இதே போல் மேற்கு வங்காளத்தில் (2019) முதலில் 6 என்றும், பிறகு 2 என்றும் உள்ளது.  இப்படி பெரும்பாலான மாநிலங்களில் தரவுகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதைக் காண முடிகிறது. 

இந்த விவரங்களைக் கொண்டு பார்க்கையில் கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாளச் சாக்கடை மரணங்கள் அதிகம் நிகழ்வது தமிழ்நாட்டில் தான் என்பதை அறிய முடிகிறது. ஆனால், முன்பே சொன்னது போல மற்ற மாநிலங்களில் முறையாக வழக்குகள் பதியப்படுகிறதா என்பது கேள்விக் குறிதான்.

முடிவு : 

நம் தேடலில், தலித்துக்கள் மீதான தாக்குதலில் தமிழ்நாடு முதலிடம் எனத் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியது உண்மை அல்ல. என்சிஆர்பி வெளியிட்ட தரவுகளின்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித்துக்கள் மீது அதிகப்படியான தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader