கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவின் சாதனைகள்..!

பரவிய செய்தி
கியூபா தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இல்லாத நாடு. 6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி உள்ள நாடு. நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடை உள்ள நாடு. கியூபாவின் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் தான். வீடில்லாத கியூபியன் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது. ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையின் சாதனைகள் இவை.
மதிப்பீடு
சுருக்கம்
கியூபா தேசத்தின் சிறப்பு சாதனைகள் பற்றி பட்டியலிடப்பட்டவை குறித்து விரிவாக காணலாம்.
விளக்கம்
ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா மற்றும் பல புரட்சியாளர்களின் ஒப்பற்ற முயற்சியால் ஏகாதிபத்தியத்தில் இருந்து கியூபா என்ற ஒரு தேசம் சுதந்திர நாடாக உதித்தது. கியூபாவின் வலிமையான தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ ஆட்சி அங்கு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.
தனியார் மருத்துவமனைகள் :
- கியூபா தேசத்தில் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான மருத்துவம் வழங்கப்படுகிறது. தேசத்தில் உள்ள அனைத்து கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவம் பயன்படும் வகையில் செயல்படுத்தி வருகின்றனர். மேலும், மருத்துவம் தொடர்பான அனைத்து காரியங்களும் அரசின் கட்டுபாட்டில் உள்ளது.
- கியூபாவில் தனியார் மருத்துவமனைகள் இல்லை என்று கூற இயலாது. ஒரு சில தனியார் மருத்துவமனைகள் கியூபாவில் அமைந்துள்ளன. முக்கிய நகரங்களான Havana , Holguin , Santiago de cuba உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
கல்வி :
- கியூபாவில் கல்வி என்பது எவ்வித பாகுபாடு இன்றி அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் சமமாகவும், இலவசமாகவும் வழங்கப்படுகிறது. நாட்டில் கல்வி நிலையை உயர்த்த 6 முதல் 16 வரையிலான அனைவருக்கும் சிறந்த கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
- கியூபாவின் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை என்பது உண்மையே. ஆரம்பநிலை, தொடக்கநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டும் சீருடை மாறும்.
- ஆரம்பநிலை பள்ளிகளில் 1973-ல் 28.82 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் தோரயமாக 14.52 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என மாறியுள்ளது. குறைந்தபட்சம் 2015-ல் 8.9 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று உள்ளது.
- லத்தீன் அமெரிக்காவில் சிறந்த கல்வி கொள்கை கொண்ட நாடாக கியூபா விளங்குகிறது.
- கியூபாவில் சர்வதேச பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என்பது மிகவும் அரிதாக உள்ளன. அங்கு பயில்வதற்கு கட்டணமும் அதிகம். ஆகையால், கியூபாவில் தனியார் பள்ளிகள் இல்லை என்றுக் கூறி விட முடியாது.
தொழில்நுட்பத்துறை :
கியூபாவில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. தொழில்துறை, கடினமான தொழில் என ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
கியூபாவின் தொழிலாளர் சக்தியில் 66 சதவீதம் பெண்களே. தொழில்துறை சார்ந்த வேலைகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகிறார்கள்.
கியூபாவில் வீடு மற்றும் சொத்து :
- 2015 ஆம் ஆண்டில் போப் பாண்டவர் கியூபாவிற்கு வருகை தரும் முன் அங்கிருந்த முக்கிய நகரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற போது வீடுகள் இல்லாமல் பிச்சை எடுப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் என ஆயிரக்கணக்கான பேர் இருந்துள்ளனர்.
- கியூபாவில் அரசு இலவசமாக வீடுகளுக்கு பதிலாக குறைந்த செலவில் வீடுகளை வழங்கி வருகிறது. 85 சதவீத மக்கள் மக்கள் சொந்தமாக வீடு வைத்துள்ளனர்.
- வேலை செய்யும் அனைத்து மக்களும் தங்களின் வருமான வரி செலுத்துவது போல் சொத்துவரி 2% செலுத்த வேண்டும்.
- வீடு கட்ட வாங்கும் கடன்களுக்கு வட்டி இல்லை என்று கூறி விட முடியாது. 1984 சட்டத்தின்படி வீட்டு கடன் உள்ளிட்டவைகளுக்கு மிகக்குறைந்த வட்டி மட்டுமே விதிக்கப்படுகிறது.
ஒரு சில தவறான புள்ளிவிவரம் தெரிவித்து இருந்தாலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபா கல்வி, மருத்துவம், வேலை என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி சாதனை புரிந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.