ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், ரவீந்திரநாத் படங்கள் இடம்பெற ஆர்.பி.ஐ பரிசீலனை என வதந்தி !

பரவிய செய்தி
ரூபாய் நோட்டுகளில் ரவீந்தரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் படத்தை அச்சிடுவது குறித்து மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் உள்ள அனைத்து மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவமே உள்ளது. தற்போது புதிய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை அச்சிடுவது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் ஆலோசித்து வருவதாக முன்னணி செய்தி ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன.
தினமலர் செய்தியில், ” ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரிண்டிங் அன்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்களை கொண்ட இரண்டு தனித்தனி ரூபாய் நோட்டு மாதிரிகளை டெல்லி ஐஐடி பேராசிரியர் திலிப் சகானிக்கு அனுப்பி வைத்துள்ளது. அவற்றில் எதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பரிந்துரைக்க கூறியுள்ளதாக தகவல் ” என வெளியிட்டு இருந்தது.
உண்மை என்ன ?
இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்களை அச்சிட பரிசீலனை நடைபெற்று வருவதாக முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகு, அதை மறுத்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு இருந்தது.
” இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் மகாத்மா காந்திற்கு பதிலாக மற்றவர்களின் முகத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், இதுபோன்ற எந்தவொரு பரிசீலனையையும் ரிசர்வ் வங்கி எடுக்கவில்லை ” என அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில் , ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் படத்தை அச்சிடுவது குறித்து மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல் என வெளியான செய்திகள் வதந்தி என அறிய முடிகிறது.