சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சுவரில் வரையப்பட்ட இ.பி.எஸ் படத்தை பெயின்ட் கொண்டு அழித்தனரா ?

பரவிய செய்தி
பழனிச்சாமிக்கு மூடுவிழா நடத்திய சி.வி.சண்முகம். பழனிச்சாமி படத்தை பேப்பர் போட்டு ஒட்டியும் பெயரையும் வெள்ளை பெயின்டால் அழிக்கப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் அமைச்சரும், அதிமுக ராஜ்யசபா உறுப்பினருமான சி.வி சண்முகத்தின் புகைப்படம் பெரியதாக உள்ள சுவர் விளம்பரம் ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை பேப்பர் ஒட்டியும், அவரது பெயரை வெள்ளை பெயின்ட் கொண்டு மறைத்ததாகவும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
https://twitter.com/jkmultiplus/status/1607218599441367041
அப்புகைப்படத்தை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் உசிலம்பட்டி கீதா (ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்), சசிகலா ஆதரவாளர் கொம்பை பறை கண்ணன், தூத்துக்குடி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் ஜெயகுமார் எனப் பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் மற்றும் பெயரை மறைத்ததாகப் பரவும் புகைப்படம் குறித்து இணையத்தில் தேடிய போது, ‘ஐ தமிழ்‘ என்ற இணையப் பக்கத்தில் அப்புகைப்படத்தினை காண முடிந்தது.
2022, ஜூன் 24ம் தேதி “எரியும் நெருப்பில் எண்ணெய்”.. ஓபிஎஸ் பெயர், புகைப்படங்கள் அழிப்பு! – சிவி சண்முகம் ஆதரவாளர்கள் செயலால் பரபரப்பு!” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அச்செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயர் வெள்ளை பெயின்ட் கொண்டு மறைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அதற்குப் பக்கத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் மற்றும் பெயர் அழிக்கப்படவில்லை.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையே பின்பற்றப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் பிரச்சனை தொடங்கியது. அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஆனார்.
இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 23 தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிய இருந்த நிலையில், அதனை அதிமுக பொதுக்குழு நிராகரிப்பதாக ஆவேசமாக சி.வி.சண்முகம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சி.வி.சண்முகம் உள்ள விழுப்புரம் அதிமுக அலுவலகம் மற்றும் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர்களில் இடம் பெற்றிருந்த அதிமுக விளம்பரங்களில் ஓ.பி.எஸ் பெயர் மற்றும் படங்கள் அழிக்கப்பட்டன. அப்புகைப்படத்தை எடிட் செய்து இ.பி.எஸ் பெயர் மற்றும் புகைப்படம் மறைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் சுவரில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் மற்றும் பெயரினை வெள்ளை பெயின்ட் கொண்டு மறைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மற்றும் புகைப்படம் மறைக்கப்பட்டிருப்பதே உண்மை என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.