சைக்கிள் பெண் ஜோதி வன்புணர்வு செய்து கொலை என வதந்தி !

பரவிய செய்தி
சூலை 5 : பீகாரில் பெற்ற தகப்பனை 1500 கிமீ சைக்கிள் மிதித்தே கரோனா ஊரடங்கால் அழைத்துவந்த 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். இது என்ன நாடா -இல்லை சுடுகாடா ? பீகார் அரசே கொலைச் செய்தவர்களை உடனே தூக்கிலிடு .
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா பொதுமுடக்கத்தின் போது குருகிராம் பகுதியில் இருந்து பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு சுமார் 1,200 கிமீ தனது தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற பெண்ணின் செயல் இந்திய அளவில் பாராட்டுக்களை பெற்றது. தற்போது அந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
ஜூலை 1-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ” பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள பட்டூர் கிராமத்தின் பழத்தோட்டத்தில் 14 வயது பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண் பழத்தோட்டத்தில் இருந்து மாம்பழங்களை பறித்ததால் தோட்டத்தின் உரிமையாளர் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ரா வன்புணர்வு செய்து கொன்றுள்ளதாக இறந்த பெண்ணின் தந்தையால் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த பகுதியில் பதற்றம் உருவாகியது. இறந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சைக்கிள் பெண் :
சைக்கிள் பெண் ஜோதியின் கிராமம் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள சிர்குல்லி எனும் கிராமம். ஆனால், பழத்தோட்டத்தில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட பெண் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள பட்டூர் கிராமம். இரு பெண்களின் பெயரும் ஜோதி என்பதாலும், தர்பாங்கா மாவட்டமும் என்பதால் தவறான செய்தி கடந்த சில தினங்களில் பரவி வருகிறது.
நியூஸ் 18 ஹிந்தி செய்தியில், சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி தர்பாங்கா மாவட்டம் முழுவதும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக எஸ்எஸ்பி பாபு ராம் தகவல் தெரிவித்து உள்ளார். அதேபோல், சைக்கிள் பெண் ஜோதி வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தவறான செய்திகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முடிவு :
நமது தேடலில், பீகாரில் சைக்கிள் பெண் ஜோதி வன்புணர்வு செய்யப்பட்டு உள்ளதாக பரப்பப்படும் தகவல் தவறானது. இருவரும் வெவ்வேறு பெண்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறது. சைக்கிள் பெண் ஜோதியின் புகைப்படத்தை தவறாக பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.