This article is from Sep 18, 2019

சைக்கிளில் சென்ற சிறுவனிடம் ஹெல்மெட் கேட்ட போலீஸ் ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

சைக்கிளில் சென்ற பள்ளி மாணவரிடம், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஹெல்மெட் கேட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் அபராதம் செலுத்தி வருகிறார்கள்.

இதில், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்களிடம் ஹெல்மெட் அணியவில்லை என காவல்துறையினர் பறந்து பறந்து பிடித்து அபராதம் விதிக்கும் காட்சிகளை பொதுமக்கள் பார்த்து வரும் நிலையில், சைக்கிளில் சென்ற மாணவரிடம் காவல்துறையினர் ஹெல்மெட் கேட்டதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தின் ஏரியூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அந்நேரத்தில் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களின் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சைக்கிளில் வந்த சிறுவனை தடுத்து நிறுத்தும் வீடியோவே வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சைக்கிளை பூட்டி சாவியை எடுப்பதோடு, சைக்கிளை ஓரமாக வைத்து விட்டு சிறுவனை நோக்கி கண்டித்து விட்டு காவல் அதிகாரி இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை சரிபார்க்கிறார். அந்த சிறுவன் சைக்கிள் அருகில் காத்துக் கொண்டிருக்கிறான்.

சைக்கிளில் வந்த சிறுவனிடம் ஹெல்மெட் இல்லை எனக் கேட்டு சைக்கிளை பூட்டி காக்க வைத்ததாக வைரலாகும் வீடியோ ஊடகச் செய்திகளிலும் வெளியாகியது. இதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள ஏரியூர் நிலையத்திற்கு Youturn தரப்பில் இருந்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பொது பதில் அளித்து இருந்தனர்.

காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இரு கைகளையும் விட்டு சைக்கிளை ஓட்டி கொண்டிருந்ததால், இதனை கவனித்த காவல் அதிகாரி(பெயர் குறிப்பிடவில்லை) சிறுவனை எச்சரிக்கும் வகையில் சைக்கிளை வழிமறித்து பூட்டி சிறுவனை சிறிது நேரம் காக்க வைத்ததாக தெரிவித்து இருந்தனர்.

முடிவு :

நம்முடைய தேடலில், சைக்கிளில் சென்ற சிறுவனிடம் ஹெல்மெட் எங்கே என காவல் அதிகாரி காக்க வைத்தாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் ஏரியூர் காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவித்து உள்ளனர். சிறுவன் இரு கைகளை விட்டு சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்ததால் காவல் அதிகாரி சிறுவனை கண்டிக்க அப்படி செய்ததாக கூறியுள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader