This article is from Mar 23, 2019

மோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா ?| து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா !

பரவிய செய்தி

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பருப்பு விலை உச்சத்தை தொட்டது, ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் கடந்த மூன்று வருடங்களாக பருப்பு வகைகளின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

பருப்பு வகைகளின் விலை 150-ஐ தாண்டியது என்னவோ உண்மை தான். ஆனால் விலை உச்சத்தை தொட்டது 2014 தேர்தலுக்கு பின்னான பாரதிய ஜனதா ஆட்சியில் 2015-ல் தான்.

விளக்கம்

ஆட்சியாளர்களின் பெருமைப் பற்றி பேச உபயோகிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று விலைவாசி. மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை ஏற்றம், இறக்கம் மிக முக்கியமானது. அதில், பருப்பு வகைகளின் விலை என்றும் முக்கியமானவையாக பார்க்கப்படும்.

காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியில் பருப்பு விலை பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் இடம்பெறும். சமீபத்தில் கூட சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை & ஷாப் வர்த்தக நல சங்கம் பெயரில் வெளியான அறிக்கை ஒன்றில் பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பருப்பு வகைகளின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதாகவும். 2014-க்கு முன்பு வரை பருப்புகளின் விலை 150 ரூபாய்க்கு மேல் இருந்தாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

சேலத்தில் இருந்து வெளியான அறிக்கையை பாஜக கட்சியின் ஆதரவாளர் கே.டி.ராகவன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தார். பருப்பு விலை பற்றி இவர்கள் கூறுவது உண்மையா என தேடியதில், பருப்பு வகைகளின் விலை யார் ஆட்சியில் உயர்ந்து இருந்தது என்ற ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது.

2013  :   

2013 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 14-ம் தேதியில் ஒரு கிலோ துவரம் பருப்பு முதல் ரகம் 70.ரூ, இரண்டாம் ரகம் ரூ.62 ஆக இருந்துள்ளது. மேலும், மற்ற பருப்புகளின் விலையும் அதிகபட்சம் 80 ரூபாயை தாண்டவில்லை.

2014 தேர்தல் நேரம் : 

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஏப்ரல் 2-ம் தேதி வெளியான செய்திகளில் தமிழத்தில் திடீரென பருப்பு வகைகளின் விலை உயர்ந்ததாக வெளியாகின. அதற்கு காரணம், உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்ததாலும், பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி குறைந்து இருந்தாலும், குறிப்பாக தேர்தல் சமயம் என்பதால் நெருக்கடி நிலை இருக்காது என பெரு நிறுவனங்கள் பருப்பு வகைகளை பதுக்கி வைத்தக் காரணத்தினால் விலை உயர்ந்து இருக்கலாம் என கூறப்பட்டது.

அன்றைய நாட்களில் பாசிப் பருப்பு மட்டுமே 100-102 ரூபாய்க்கு விற்கப்பட்டன, துவரம் பருப்பு முதல் ரகம் 75ரூ , இரண்டாம் ராகம் 65ரூ, உளுத்தம் பருப்பு 76ரூ, பர்மா உளுந்து 74 ஆக உயர்ந்து இருந்தது.

ஆக, வர்த்தக நல சங்கம் கூறியது போன்று, 5 ஆண்டுகளுக்கு முன்பு பருப்பு வகைகளின் விலை 150 முதல் 180 ரூபாயை உயர்ந்து இருந்தது என்பது தவறான தகவலாகும்.

பருப்பு விலை 200-ஐ நெருக்கியது எப்போது ? 

2015 ஆம் ஆண்டு முழுவதும் பருப்பு வகைகளின் விலை பட்டியல் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. 2015 ஜனவரியில் தொடங்கிய விலை ஏற்றம் 2016 வரையில் உச்சத்தில் இருந்தது.

2015 ஜனவரியில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ உளுந்து 78 ரூபாய், பாசி பருப்பு 98  ரூபாய், மசூர் பருப்பு 74 ரூபாயாக இருந்தது. ஆனால், 2015 ஜூன் மாதத்தில் ஒரு கிலோ உளுந்து 98 ரூபாய், பாசி பருப்பு 102  ரூபாய், மசூர் பருப்பு 80 ரூபாயாக விலை உயர்ந்தது. அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ உளுந்து 107 ரூபாய், பாசி பருப்பு 108  ரூபாய், மசூர் பருப்பு 89 ரூபாயாக உயர்ந்து கொண்டே சென்றது. இந்த விலை இடங்களுக்கு ஏற்ப சில்லறை விற்பனையில் கூடுதலாக விற்கப்பட்டு இருந்தன.

இதில், 2015 அக்டோபர் மாதத்தில் துவரம் பருப்பு விலை 180-ஐ நெருங்கி இருந்ததால் விலை மேலும் அதிகரித்து ரூ.200-ஐ தொடும் என Economics Times, The Hindu போன்றவற்றில் செய்திகள் வெளியாகி உள்ளன.

” 2015-ல் பருப்பு வகைகளின் விலை ஏற்றம் குறித்த விவரங்கள் அனைத்தும் Community data govt.in  என்ற அரசு தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன”.

இன்றைய நாட்களில் பருப்புகளின் விலை 70-90 ரூபாய் என குறைந்து இருந்தாலும். 150 ரூபாயை தாண்டியது தற்போது உள்ள ஆட்சியில் தான் என்பதே உண்மை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader