கோவிலுக்குள் சென்ற தலித் சிறுவர்களைக் கொடுமைப்படுத்தியதாக பரவும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தர்களுக்கு இடையே விநியோகிக்கப்பட்டு வந்த பிரசாதத்தை பெறுவதற்காக தலித் (கோப்ளர்) சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததற்கு இரக்கமின்றி தாக்கப்பட்டு தலைமுடியை வெட்டி மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கோவிலுக்குள் சென்றதால் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தலைமுடியை மழித்து தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் நிகழ்ந்ததாக மேற்காணும் புகைப்படம் சுதந்திரத்தினத்தில் சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது. இவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
உத்தரப் பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களை துன்புறுத்தியதாக வெளியான செய்திகள் குறித்து தேடிய போது வைரலாகும் புகைப்படத்துடன் தொடர்புடைய செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. இதையடுத்து, புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016-ம் ஆண்டில் ஆகஸ்ட் 4-ம் தேதி odishanewsinsight எனும் இணையதளத்தில், ஃபோட்டோஷாப் மற்றும் பொய் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதாக இப்புகைப்படம் குறித்து வெளியிட்டு இருந்தனர்.
அதில், பங்களாதேஷ் நாட்டின் சில்ஹெட் பகுதியில் பசியில் இருந்த இரு சிறுவர்கள் உணவைத் திருடியதற்காக கட்டி வைத்து தலைமுடியை மழித்து, அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் நிகழ்ந்ததை ஹரியானாவில் நிகழ்ந்ததாக தவறான பிரச்சாரம் செய்து வருவதாக குறிப்பிட்டு இருந்தனர். எனினும், இச்சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக ஆதாரங்கள் ஏதும் அளிக்கவில்லை.
Tied up and head shaved.They stole food #sylhet #Bangladesh pic.twitter.com/ZpHrZIwQ20
— Pravir K Roy (@Pravir9) July 24, 2016
இதற்கு முன்பாக, ஜூலை 24-ம் தேதி பிரவீர் கே ராய் எனும் ட்விட்டர் பக்கத்தில், பங்களாதேஷ் நாட்டின் சில்ஹெட் பகுதியில் பசிக்காக உணவைத் திருடிய சிறுவர்களை கட்டி வைத்ததாக புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளார். இதைத் தவிர்த்து சமூக வலைதளங்களில் அதே பங்களாதேஷ் நாட்டில் நிகழ்ந்ததாக பல பதிவுகள் உள்ளன. இதற்கு பின்னரே, இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்த்த சிறுவர்கள் என பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வந்துள்ளது.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்றதாகக் கூறி தாக்கப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் கூட அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2019-ல் மும்பை பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த ஒடுக்கப்பட்ட சமுதாய சிறுவனை பலவந்தமாக சூடான கல்லில் நிர்வாணமாக உக்கார வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்படி, இன்றளவும் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுமைகள் அரங்கேறி வருகிறது உண்மையாக இருந்தாலும், அதனுடன் தொடர்புப்படுத்தி தவறான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முடிவு :
நம் தேடலில், உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் நுழைந்த தலித் சமூகத்தின் சிறுவர்களை கொடுமைப்படுத்தியதாக பரவும் புகைப்படம் தவறானது. பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த புகைப்படம் கடத்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தவறான பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.