This article is from Sep 09, 2019

ராமர் கோவிலுக்குள் செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பா ?

பரவிய செய்தி

ராமர் கோவில் திருவிழாக் காலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதாம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராமர் கோவிலில் 10 நாள் பூஜைக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவில்களில் நுழைய அனுமதி மறுத்து வருவது பல ஆண்டுகள் கடந்து தற்பொழுது நடைமுறையில் இருப்பதாக கேள்விப்பட்டு உள்ளீர்களா ? இப்பொழுது எல்லாம் யார் சார் அப்படி பார்க்குறா, அனைவரும் கோவில்களுக்கு போகிறோம் என சொல்பவர்களே அதிகம்.

” ஆனால், நடைமுறையில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கோவில்களில் நுழைய அனுமதி மறுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் “.

” உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ராமர் கோவிலில் 10 நாள் பூஜைக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிக்கை விட்டதாக ” யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் கூறி, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அதில் கூறப்பட்டுள்ள கோவில் அடையாள சொற்களை வைத்து தேடிய பொழுது விடுதலை நாளிதழில் ” ராமர் கோவில் திருவிழாக் காலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடதாம் ” என்ற தலைப்பில் வெளியான செய்தியின் துவக்கம் கிடைத்தது. அதில், குறிப்பிட்டு இருக்கும் விவரங்களை வைத்து எப்பொழுது நிகழ்ந்தது என்று மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்தோம்.

2017 ஆகஸ்ட் 24-ம் தேதி நியூஸ் 18-ன் செய்தியில் உத்தரப் பிரதேசத்தில் கோவிலுக்குள் செல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் ஹமிர்புர் மாவட்டத்தில் உள்ள கதா என்ற கிராமத்தில் உள்ள ராம் ஜானகி கோவிலில் ” ராமாயணம் பாடல் ” நிகழ்ச்சி நடைபெற இருந்ததை தொடர்ந்து 10 நாட்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒட்டப்பட்டு இருந்தது.

உயர் சாதி எனக் கூறிக் கொள்பவர்கள் அதிகம் வருவதாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் ” சுத்தமானவர்கள் ” இல்லை என்பதால் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும். 10 நாட்கள் ராமாயணம் பாடல் நிகழ்ச்சி முடியும் வரை வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

எனினும், மாவட்ட நிர்வாகத்தின் அழுத்ததின் காரணமாக ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள் அகற்றப்பட்டன. ஆனால், வழிபாடு நடக்கும் நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து விடக் கூடாது என கோவில் வாசலில் கையில் தடியுடன் இருவர் பாதுகாப்பிற்கு நின்றுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை விதிக்கும் நோட்டீசில் கையெழுத்திட்ட கோவில் பூசாரி குன்வர் பகதூர் கூறுகையில், ” கோவிலுக்கு வரும் அவர்கள் குடித்து விட்டு வருவதால், கோவிலின் புனிதம் கேட்டு விடும் என்ற காரணத்தினால் வேறு வழியின்றி செய்ததாக கூறி இருக்கிறார். மேலும், கோவில் உள்ள நிலம் தன்னுடைய மூதாதையருக்கு சொந்தமானது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பது புதிய கட்டுப்பாடுகள் இல்லை, நீண்ட காலமாக கடைபிடிக்கும் ஒன்று எனத் தெரிவித்து இருக்கிறார்.

ராஜு சாஹு என்பவர் கூறுகையில், வழிபாட்டிற்காக கோவிலுக்குள் சென்ற பொழுது அடித்து, வலுக்கட்டாயமாக கோவிலுக்குள் வெளியே விரப்பட்டதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பில், கதா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பது தவறு, அது குற்றமாகும் ” என கூறியதை ETV வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிலுகளுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுப்பது பல பகுதிகளில் அரங்கேறி வருகிறது. 2016-ல் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் நடைமுறையை இந்தியா டுடே களத்தில் சென்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

2019-ல் கர்நாடகாவில் கல்லேஸ்வரா கோவில் பழுதடைந்த காரணத்தினால் மக்களிடம் நிதி திரட்டி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூறிய பிறகு அரசு அதிகாரிகள் தலையிட்டனர்.

இன்றைய காலத்திலும் இப்படி தீண்டாமை எனும் தீய எண்ணத்தை கடைபிடிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அனைவரும் இந்துக்கள் எனக் கூறும் தேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கின்றனர். இந்நிலை மாறவே பல தலைவர்கள் போராடினார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் தீண்டாமை தொடர்வது வேதனையளிக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader