This article is from Sep 30, 2018

நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்ணின் புகைப்படம்: எங்கே நடந்தது ?

பரவிய செய்தி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தோழிகளுடன் கோவிலுக்குள் சென்ற தலித் பெண்ணை நடுவீதியில் நிர்வாணப்படுத்தி நிற்க வைத்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவத்தை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றதாக கூறி தவறான செய்தியை வெளியிட்டு உள்ளனர் என்று மறுப்பு செய்தி பரவுகிறது. இந்த புகைப்படம் தொடர்புடைய சம்பவம் எது என்பது காண்போம்.

விளக்கம்

 ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி நிற்க வைத்த புகைப்படம் அதிகம் வைரலாகியதை பார்த்திருப்போம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது தோழிகளுடன் கோவிலுக்குள் நுழைந்த தலித் சமூக பெண்ணை நடுவீதியில் நிர்வாணப்படுத்தி நிற்க வைத்துள்ளனர் என்று கோப அலைகள் உருவாகியது.

இந்த செய்தி வைரலாகிய போதே, பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவத்தை இந்தியாவில் நிகழ்ந்தது என்றுக் கூறி கேவலமான செயலை செய்துள்ளனர் என்று எதிர்ப்பு உருவாகியது. அதனுடன் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் நாட்டின் செய்திகளில் வெளியானதை இணைத்து பகிர்ந்து வந்தனர். எனினும், பெண்ணை நிர்வாணப்படுத்தி நிற்க வைத்தப் புகைப்படம் எங்கிருந்து வந்தது என்ற குழப்பம் இருந்து வருகிறது.

பாகிஸ்தானில் நடந்தது :

2017 நவம்பர் மாதம் வடமேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள தொலைத்தூர கிராமத்தில் 16 வயதுடைய பெண்ணை நிர்வாணப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. அதற்கு காரணம் அப்பெண்ணின் சகோதரன் நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் ஓர் பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்துள்ளார். இதற்கு முன்பாகவும் தவறான செயலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தியதால் அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது, அதன்பின்னரும் இதுபோன்ற செயலை நிறுத்தாமல் இருந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞனின் சகோதரியை நிர்வாணப்படுத்தி கிராமத்தில் நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வந்த பிறகு இதற்கு காரணமாக இருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்ற ஆண்டு பாகிஸ்தானில் நடந்த சம்பவம் என்றுக் கூறி ஆதாரம் அளிக்கப்பட்டாலும், அதே படத்தை 26 நவம்பர் 2014-ல் பாகிஸ்தான் குற்றவழக்கு போலீசின் ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் தலித் பெண் நிர்வாணப்படுத்தி, வன்புணர்வு செய்யப்பட்டதாக செய்தியை வெளியிட்டு கீழே ஒரு லிங்க் கொடுத்து உள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்றது நவம்பர் 25-ம் தேதி ஆகும்.

இந்தியாவில் நடந்தது :

அதில், 2014-ல் மகாராஷ்டிராவில் கராத் அருகில் உள்ள முல்கோன் என்ற கிராமத்தில் உயர்சாதி பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஊரை விட்டு ஓடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பையனின் தாயை கிராமத்தில் பலரின் முன்னிலையில் வைத்து கடுமையாக தாக்கி, நிர்வாணப்படுத்தி தவறாக நடந்துள்ளனர். 10 பேர் சேர்ந்து செய்ய இந்த கொடூர சம்பவத்தில் 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு இரு வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் இப்படம் தொடர்புடையது என்று மாறி மாறிக் கூறினாலும், இப்படத்தின் உண்மையான செய்தியை அறிய முடியவில்லை. ஆம், Face of Malwai என்ற செய்தியை தவிர வேறு எந்த செய்தியிலும் இந்த படம் இடம்பெறவில்லை. மேலும், இந்த படம் தொடர்புடைய நம்பத்தகுந்த செய்திகளும் கிடைக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க இவ்விரு செய்திகள் தவிர்த்து பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ” பாகிஸ்தானில் வீட்டில் வேலை செய்து வந்த 28 வயது கிறிஸ்துவ பெண்ணை சரியாக வேலை செய்யவில்லை என நிர்வாணப்படுத்தி தாக்கியது, 2016-ல் ஒரிசாவில் தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தியது, 2015-ல் உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண் மற்றும் அவரது குடும்பமே தங்களை நிர்வாணப்படுத்தி போலீஸ்க்கு எதிராக போராடிய சர்ச்சைக்குரிய வீடியோ என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன “.

பெண்ணை நிர்வாணப்படுத்தி மக்கள் வேடிக்கை பார்க்கும் கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது பாகிஸ்தானா, இந்தியாவா அல்லது வேறு எங்கோவோ என்று முடிவுக்கு வரும் அளவிற்கு அப்படம் தொடர்பான முழுமையான ஆதாரங்கள் ஏதுமில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader