வைரலாகும் வீடியோவில் தாக்கப்படுபவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அரசு பணியாளரா ?

பரவிய செய்தி
அரசு வேலையில் இருந்தாலும், எந்த பதவி வகித்தாலும் தலித்துகள் தலித்தாண்டா என , மேல் வகுப்பினருக்கு அடிமைகளாக வாழ வேண்டும் என்று கூறி தாக்கும் மேல் சாதி வட நாட்டவர்.. நீதி கிடைக்கும் வரை பகிருங்கள்..
மதிப்பீடு
விளக்கம்
” அரசு வேலையில் இருந்தாலும் தலித் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாகுவதாக ” பாஜக கொடி இடம்பெற்ற அறை ஒன்றில் காவி துண்டு அணிந்த ஒருவர் அங்கிருக்கும் மற்றொருவரை தாக்கும் 1.45 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு வேலையில் இருந்தாலும், எந்த பதவி வகித்தாலும் தலித்துகள் தலித்தாண்டா என , மேல் வகுப்பினருக்கு அடிமைகளாக வாழ வேண்டும் என்று கூறி தாக்கும் மேல் சாதி வட நாட்டவர்.. நீதி கிடைக்கும் வரை பகிருங்கள்.. pic.twitter.com/66IdPhrSw5
— Hyder🇮🇳 (@hyderali857685) April 22, 2022
உண்மை என்ன ?
வடநாட்டில் நிகழ்ந்ததாக கூறும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூர் பகுதியில் இளைஞர் ஒருவரை பாஜக குண்டர்கள் தாக்குவதாக ” சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 15-ம் தேதி இவ்வீடியோ பகிரப்பட்டு உள்ளது.
हाथ में सत्ता का डंडा लेकर अत्याचार कर रहे भाजपाई गुंडे भाजपा सरकार के जंगलराज की तस्वीर बयां करते है।
शाहजहांपुर में युवक की पिटाई करते भाजपा नेता का वीडियो सत्ता संरक्षित अपराध की बानगी है।
वीडियो के आधार पर दोषियों के खिलाफ हो कठोरतम कार्रवाई।@ShahjahanpurSp pic.twitter.com/iHTSHyf4Ku
— Samajwadi Party (@samajwadiparty) April 15, 2022
வைரலாகும் வீடியோ குறித்த சமாஜ்வாதி கட்சியின் ட்விட்டர் பதிவில், தாக்கப்படும் இளைஞர் தலித் பிரிவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடவில்லை. மேலும், வைரல் வீடியோ குறித்து வெளியான செய்திகளிலும் பாதிக்கப்பட்டவர் தலித் எனக் குறிப்பிடப்படவில்லை.
” வீடியோவில் தாக்குதலுக்கு உள்ளான நபரின் பெயர் ராஜீவ் பரத்வாஜ், அவரை தாக்கிய பிரதீக் திவாரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், முக்கிய நபரான பிரதீக் திவாரி கைது செய்யப்படவில்லை ” என ஏப்ரல் 18-ம் தேதி ஜாக்ரன் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து ஷாஜகான்பூர் ஏஎஸ்பி சஞ்சய் குமார், ” இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பிரதீக் திவாரி மற்றும் பாதிக்கப்பட்டவர் ராஜீவ் பரத்வாஜ். அவர்களுக்குள் பணத்தை திருப்பி தருவது தொடர்பாக இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. இது பாஜக உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நடந்துள்ளது. எனினும், முக்கிய குற்றவாளி பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல. பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் ஆகிய ஒருவரும் ஒரே சாதியை(பிராமணர்) சேர்ந்தவர்கள் ” என லாஜிகல் இந்தியன் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், வைரலாகும் வீடியோவில் தாக்கப்படும் நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. பாதிக்கப்பட்டவரும், தாக்கியவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.