தலித்துகள் சிறிய வீடாக கட்ட வேண்டும் என பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறினாரா ?

பரவிய செய்தி
பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக்கூடாது. தலித்துகள் அவர்களின் வீட்டை விட சிறிய வீடாக கட்டிக் கொள்ள வேண்டும் – பிராமண சங்க தலைவர் நாராயணன்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் என்பவர் தலித்துகள் சிறிய வீடாக கட்ட வேண்டும், பிராமணர்களின் வீட்டை விட மற்றவர்கள் யாரும் உயரமாக வீடு கட்டக் கூடாது எனக் கூறியதாக தந்திடிவி சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவன் யாரு? லவடிக்கபால் நான் எப்படி வாழனும்னு முடிவு பன்றதுக்கு. pic.twitter.com/zxTevIsW62
— Vinodh Ravi (@VinodhRavi4) February 12, 2022
உண்மை என்ன ?
தமிழ்நாட்டில் பிராமண சங்கத் தலைவர் தலித்துகளின் வீடு எப்படி இருக்க வேண்டும் என இப்படியொரு கருத்தைக் கூறியிருந்தால் கண்டனங்கள் மட்டுமின்றி செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
வைரல் செய்யப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டில் பிப்ரவரி 10-ம் தேதி என இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்து தேடியப் போது தந்திடிவியின் சமூக வலைதள பக்கங்களில் மேற்காணும் நியூஸ் கார்டு இடம்பெறவில்லை. தந்தி டிவி நியூஸ் கார்டில் எடிட் செய்து உள்ளனர் என அறிய முடிகிறது.
எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டில் இடம்பெற்ற தமிழ்நாடு பிராமண சங்கத் தலைவர் நாராயணன் புகைப்படம், சில மாதங்களுக்கு முன்பாக ” கலப்பு திருமணம் கூடாது ” என அவர் பேசி வைரலான வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் தலித்துகளின் வீடுகள் குறித்து ஏதும் பேசவில்லை.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நாராயணன் அவர்கள் அளித்த பேட்டியின் போது , ” தமிழகத்தில் தலித் தலைவர் ஏன் முதல்வர் ஆகவில்லை, தலித் ஒருவரை முதல்வராக்க தயார் ” என பேசிய இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக்கூடாது, தலித்துகள் அவர்களின் வீட்டை விட சிறிய வீடாக கட்டிக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பிராமண சங்க தலைவர் நாராயணன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.