This article is from May 21, 2020

குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி

குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டுள்ளார். இடம்- முபாரக்பூர்

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் உள்ள முபாரக்பூர் பகுதியில் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் குடித்த காரணத்திற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் தாக்கப்பட்டதாக காயத்துடன் இருக்கும் பெண்ணின் புகைப்படம் முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.

முபாரக்பூர் பகுதியில் இருந்த குழாயில் தண்ணீர் குடித்ததால் தாக்கப்பட்ட தலித் பெண் என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஏப்ரல் 24-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் சிந்து பகுதியில் முஸ்லீம்களுக்கு சொந்தமான குழாயில் தண்ணீர் குடித்ததற்காக இந்து பெண் முஸ்லீம்களால் தாக்கப்பட்டுள்ளார் என ட்விட்டர்களில் வைரலாகி உள்ளது என்பதை அறிய முடிந்தது.

Archive link 

மேலும், ஏப்ரல் 25-ம் தேதி rabwah.net எனும் தளத்தில், ” குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற இந்துக்களை சூம்ராஸ் பிரிவினர் தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 25-ம் தேதி சுக்குரில் உள்ள முபாரக்பூர் பகுதியில் நிகழ்ந்து உள்ளது. அப்பகுதியின் காவல்துறை குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது ” என வெளியிட்டு உள்ளது.

முபாரக்பூர் பகுதி பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் சுக்குர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இது தொடர்பாக ஏப்ரல் 25-ம் தேதி சுக்குர் மாவட்ட எஸ்எஸ்பி இர்பான் சமோ உடைய ட்விட்டர் பக்கத்தில், கோகர் பிரிவு (முஸ்லீம்ஸ்) மற்றும் சூம்ரோஸ் பிரிவு இடையே ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக சூம்ரோஸ் பிரிவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

Twitter link | archive link

சுக்குர் மாவட்ட எஸ்எஸ்பி ட்விட்டரில் குறிப்பிட்டது போன்று தாக்கப்பட்டவர்கள் 5 பேரும் கோகர் பிரிவைச் (முஸ்லீம்கள்) சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சூம்ரோஸ் பிரிவைச் (முஸ்லீம்கள்) சேர்ந்தவர்கள் என சிந்து போலீஸ் ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் தவறான செய்திகள் பரவுவதாக ஒருவர் பதிவிட்ட ட்வீட் பதிவுக்கு சிந்து போலீஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் தாக்கப்பட்ட பெண் சிறுபான்மையினர் அல்ல, முஸ்லீம் கோகர் பிரிவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு உள்ளது.

Twitter link | archive link 

இன்றும் இந்தியாவின் ஏதோ ஒரு இடத்தில் சாதியரீதியான ஒடுக்குமுறையை குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து வருகிறார்கள் என்பது உண்மை. அவ்வாறான ஒடுக்குமுறைகள் கண்டிக்கத்தக்கது, அதற்கு எதிரான குரல்களை எழுப்ப வேண்டியது நமது கடமை. ஆனால், தவறான தகவல்களை பரப்புவது சரியல்ல.

முடிவு : 

நமது தேடலில், ” முபாரக்பூர் பகுதியில் குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. பாகிஸ்தான் நாட்டின் முபாரக்பூர் பகுதியில் 3 பெண்கள் உள்பட 5 பேர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அவர்கள் அனைவரும் முஸ்லீம்களே, பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லை என சிந்து போலீஸ் தெரிவித்து உள்ளது ” என்பதை அறிய முடிந்தது.

Please complete the required fields.




Back to top button
loader