This article is from Apr 26, 2018

காமராஜரின் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் அணை கட்டப்படவில்லையா ?

பரவிய செய்தி

படிக்காத மேதை ஐயா காமராஜரின் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் தடுப்பணைகள் ஏதும் கட்டப்படவில்லை. அணைகள் கட்டி நீரை தேக்கினால் தானே தண்ணீர் பஞ்சம் தீரும்.

மதிப்பீடு

சுருக்கம்

தமிழகத்தில் காமராஜரின் ஆட்சிக்கு பிறகு 50 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட அணைகள்  நீர்பாசன வசதிக்கும், நீர் மின் திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ளன.

விளக்கம்

மிழகம் யாருடைய ஆட்சி சிறந்தது என கேட்டால் அனைவரது மனதும் ஒருவரைத்தான் நினைக்கும், படிக்காத மேதை என்ற புகழப்பட்ட ஐயா காமராஜரின் ஆட்சியில் தமிழகத்திற்கு பல்வேறு நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் விவசாய நலனுக்காக கட்டப்பட்ட அணைகள், நீர் மின் நிலையங்கள் மிக முக்கியமானவை.

தமிழகத்தில் இருக்கும் மிக முக்கிய அணைகளில் மேட்டூர் அணை(1934) மற்றும் பாபநாச அணை(1944) ஆகியவை ஆங்கிலேயே காலத்தில் கட்டப்பட்டவை. இவற்றை தவிர “ கீழ் பவானி, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை நீர்த்தேக்கம், அமராவதி அணை, சாத்தனூர் அணை, பரம்பிக்குளம், நொய்யாறு ஆரணியாறு, கிருஷ்ணகிரி, ஆழியாறு, வீடூர் ” போன்ற அணைகள் காமராஜரின் ஆட்சிக் காலமான 1954 முதல் 1963 வரையிலான காலக்கட்டத்தில் கட்டப்பட்டவை. இவற்றை முதலமைச்சரான காமராஜர் தன் கைகளால் திறந்து வைத்தார். மேலும், அவரது காலக்கட்டத்தில் பல நீர் மின் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இது தவிர தமிழ்நாடு மாநிலம் பிரிவதற்கு முன்பாக 1955 ஆம் ஆண்டில் கேரளாவின் மலம்புழாவில் காமராஜரால் கட்டப்பட்ட அணையால் பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

60 ஆண்டுகளாகியும் காமராஜர் கட்டிச் சென்ற அணைகள் கம்பீரமாக நிற்கின்றன, அதனால் தமிழகத்தில் பல பகுதிகளின் குடிநீர், விவசாயத் தேவை பூர்த்தியாகின்றது. ஆனால், காமராஜர் அவர்களுக்கு பின் ஆட்சியில் இருந்தவர்கள் பெரியளவில் அணைகள் ஏதும் கட்டவில்லை என பரப்பப்படுகிறது.

உண்மையில் . 1963-க்கு பிறகு தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டள்ளது. அவற்றில் ஒரு சில அணைகள் மட்டுமே பெரிய அளவில் கட்டப்பட்டவை. மற்றவை அனைத்தும் சிறிய அளவிலான தடுப்பணைகளே! 1965-ல் கள்ளக்குறிச்சி கோமுகிண்டி நீர்பாசன அணை, 1967-ல் பெரியகுளம் மஞ்சளாறு அணை, உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை, 1968-ல் ஈரோடு உப்பாறு (காவிரி), 1970-ல் கள்ளக்குறிச்சி மணிமுக்தானாதி அணை (வெள்ள தடுப்பு& நீர் பாசனம்), 2001-ல் கொடைக்கானல் சோத்துப்பாறை அணை போன்ற பல அணைகள் நீர் பாசனத்திற்கும், மின் திட்டத்திற்கும் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இதிலிருந்து, தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகள் ஏதும் கட்டப்படவில்லை என்று கூறுவது தவறான செய்தி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

2011 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் மாம்பழத்துறையாறு ஆற்றின் பகுதியில் கட்டப்பட்ட அணைதான் தமிழ்நாட்டில் இறுதியாக கட்டப்பட்ட அணையாகும். கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் தடுப்பணைகள் ஏதும் கட்டப்படவில்லை.

தண்ணீர் தேவை என நிலை தமிழகத்திற்கு உருவாகியதற்கு காரணம், பருவ மழை பொய்த்துப் போனது, காடுகள் அழிக்கப்படுவது, போதிய நீர் மேலாண்மை திட்டங்கள் இல்லாதது, ஆற்று மணல் கொள்ளை, ஏரி மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்பு என கூறிக் கொண்டே போகலாம். ஆனால் காவிரி நம் உரிமை அதை பெறுதல் கடமை தேவை . இதை நீர்த்துப் போகச் செய்யவே இந்த விஷயங்கள் பேசப்படுகிறது . நம்மூர் அரசியல்வாதிகள் சரியில்லை. அவர்கள் செய்வது சரியில்லை என்பதெல்லாம் தெரிந்தது தான் .ஆனால் அணையே கட்டவில்லை அதனால் உங்களுக்கு காவிரி வாங்க தகுதி உண்டா என்ற வாதம் செய்வது நம்மூர் அரசியல்வாதிகள் மீது வைக்கப்படும் குற்றம் இல்லை நம் மக்களை ஏமாற்றும் முயற்சி.

காவிரியை நமக்கு மறுக்க பலவிதமான பொய் திரிப்புகள் மூலம் குழப்பவும் , நீர்த்து போகச் செய்யும் முயற்சியே. இங்கு நீர் சரியாக கையாளப்படுகிறதா என்பது இரண்டாம் சிக்கல் . முதலில் நீர் வேண்டும் . அங்கு விவசாயம் , நீர் ஆதாரம் அவசியம் அத்யாவசியம் . அதை மறுக்க பிற விஷயங்களில் புரளியால் உதவ முடியும் எனில் அதை முறியடிக்க வேண்டும் . இங்கு அரசியல்வாதிகள் சரி இல்லை எனில் கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள் புனிதர்களா ? நீர் முறையாக கையாளப்படுகிறதா? இதை பேசுகிற நேரம் இதுவல்ல ! காவிரியை பெறுதல் முதல் குறி , அதை முறைப்படுத்தல் . இயற்கை வளம் பாதுகாப்பு , மணல் திருட்டு தடுக்கப்படுவது எல்லாம் அவசியம் ஆனால் அதைச் சொல்லி நம் உரிமையை மறுக்க முயற்சிப்போர்க்கு அப்பாவி விவசாயிகள் இரை ஆக வேண்டுமா ???

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader