பாமகவினரால் தாக்கப்பட்ட தயாநிதி மாறன் கார் என வைரலாகும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தயாநிதி மாறன் எம்.பி சென்ற கார் மீது பாமகவினர் தாக்குதல்.. கார் கண்ணாடியையும் நொறுக்கியது..!
மதிப்பீடு
விளக்கம்
திமுக எம்.பி தயாநிதி மாறன் சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் விடியலை நோக்கி பரப்புரை மேற்கொண்ட போது அவரின் கார் மீது பாமகவினர் கல் வீசி தாக்கப்பட்டதாகவும், காரின் கண்ணாடி உடைந்ததாகவும் செய்திகளில் வெளியாகி இருந்தது.
இதையடுத்து, பாமகவினரால் தாக்கப்பட்ட எம்.பி தயாநிதி மாறனின் பென்ஸ் கார் என விபத்தில் சிக்கிய கார் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளத்திலும், சில செய்தி இணையதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
எம்.பி தயாநிதி மாறனின் சேதமடைந்த கார் என வைரலாகும் புகைப்படம் வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக 2019-ம் ஆண்டு மே 2-ம் தேதி வெளியான செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
2019-ம் ஆண்டு வியட்நாம் நாட்டில் விபத்தில் சிக்கிய காரின் புகைப்படத்தை சேலத்தில் தாக்கப்பட்ட தயாநிதி மாறன் கார் தவறாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, மாரிதாஸ் காணொளிகள் எனும் மாரிதாஸ் ரசிக முகநூல் பக்கத்தின் பதிவில் இடம்பெற்ற தயாநிதி மாறன் கூட்டத்தில் தள்ளப்படும் மற்றொரு புகைப்படம், 2018-ம் ஆண்டு கருணாநிதி இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது.
கடந்த தேர்தலில் பாமக தலைமை 400 கோடி பெற்றதாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் குறித்து தயாநிதி மாறன் விமர்சித்து பேசியதற்காக தயாநிதிமாறனின் ஓமலூர் பயணத்தின் போது பாமகவினர் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
” என்னவென்று அறிவதற்குள் தயாநிதி மாறன் பயணித்த பரப்புரை வேன் அந்த கும்பலைக் கடந்து சென்று விட்டது. பின்னர், ஒரு கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது. இதில், பார்த்திபன் எம்.பி சென்ற கார் லேசமாக சேதம் அடைந்து உள்ளது. பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு காரின் கண்ணாடியும் சேதம் அடைந்தது. இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பும் நடந்ததாகவும் ” நக்கீரன் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், சேலம் ஓமலூர் அருகே தயாநிதி மாறன் சென்ற கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய போது சேதமடைந்ததாக பரவும் காரின் புகைப்படம் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.