சிறுமிகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை.

பரவிய செய்தி
குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்குவது தொடர்பான அவசர சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிப்பது தொடர்பான திருத்தத்தை போச்சோ சட்டத்தில் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விளக்கம்
கதுவா மற்றும் உன்னாவ் சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடெங்கிலும் பெரும் கோப அலையை ஏற்படுத்தியது. பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தாலே அதற்கும் பாலியல் வன்கொடுமை நிகழ்வும் தேசமாக இந்தியா மாறி வருகிறது. இந்திய தலைநகர் டெல்லியாக இருந்தாலும் சரி, கடைக்கோடி கிராமமாக இருந்தாலும் சரி பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 21-ம் தேதி (இன்று) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத் தொடரில், போக்சோ(POCSO-Protection for children from sexual offense) எனும் பெண்கள் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனைவிதிக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனையாக 20 வருட சிறைத்தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்கலாம். மேலும், 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைத்தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்கப்படும்.
16 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் வழங்கப்படும் தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவோ அல்லது ஆயுள்தண்டனையாகவோ நீட்டிக்கப்படலாம்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதிவேக விசாரணையையும், வழக்கை கட்டாயமாக இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உத்தரவை இந்த அவசர சட்டம் வழங்குகிறது. மேலும், 16 வயது கீழ் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் பெறுவதற்கான விதிகள் ஏதுமில்லை என்று பரிந்துரைக்கின்றது.
மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவசர சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் நிர்பயா சம்பவத்திற்கு பிறகு நாட்டில் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்தாலோ ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது மத்திய அரசு. ஆக, தற்போதுவரை பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வழங்கும் ஷரத்தே இருந்துள்ளது.
தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்பது மக்களின் மனநிலை. ஆக, பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக இருந்து வந்த கோரிக்கை தற்போது சாத்தியமாகியது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வழங்குவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அக்குற்றங்கள் நிகழாமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு முன்னெடுப்பதும் அவசியமான ஒன்று. இங்கு சட்டங்கள் கடுமையானால்தான் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்புணர்வு கொடுமைகள் முடிவுக்கு வர வழி பிறக்கும்.
பாலியல் புரிதல், பாலியல் கல்வி போன்றவை மேம்பட வேண்டும். சக பெண் உணர்வை ஆண் புரிந்து கொண்டு, பெண் போகப் பொருளாக பார்க்கும் மனோநிலை மாற வேண்டும். தொடர் முயற்சியாய் சமூகமும் அரசோடு இணைந்து முயற்சித்தல் அவசியம்.