This article is from Feb 13, 2020

டெல்லி தேர்தலில் பாஜக 36 இடங்களில் 2,000 வாக்குகளில் தோல்வி அடைந்ததா ?

பரவிய செய்தி

அமித்ஷா அவர்கள் டெல்லி தேர்தலில் நாங்கள் 45 இடங்களை பிடிப்போம் என்று சொன்னார். அங்கு பிஜேபி வென்றது : 8, பிஜேபி 100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதது : 8, பிஜேபி 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது : 19, பிஜேபி 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது : 9 , (8+8+19+9= 44) ஆக அவர் கணக்கு சரிதான்.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சியான பாஜக 45 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் நேரத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியது. டெல்லி தேர்தல் இரு தேசிய கட்சிகளுக்கும் பின்னடைவை தந்தது.

இந்நிலையில், டெல்லியில் 36 தொகுதிகளில் பாஜக 2000 வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வியை சந்தித்து உள்ளதாக ஓர் தகவல் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

8 இடங்களில் 100 வாக்குகள், 19 இடங்களில் 1,000 வாக்குகள், 9 இடங்களில் 2,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்ததாகவும், எப்படி பார்த்தாலும் அமித்ஷா கணித்து இருந்த தொகுதியே கிடைத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

Facebook link | archived link  

தமிழக பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி பிற மொழிகளிலும் டெல்லி தேர்தலில் பாஜக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்ததாகவும், இந்துக்களின் வாக்குகள் குறித்தும் பரப்பப்படுகிறது என்பதால் டெல்லி தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து தேடிய பொழுது, பீஜ்வாசன் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சத் பிரகாஷ் ராணா 753 வாக்குகள் வித்தியாசத்திலும், ஆதர்ஷ் நகர் தொகுதியில் போட்டியிட்ட ராஜ் குமார் பாட்டியா 1589 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளனர். இவ்விரு பாஜக வேட்பாளர்கள் மட்டுமே 2000 வாக்குகளுக்கு கீழே பெற்றவர்கள்.

பரப்பப்படும் தகவலில் உள்ளது போல் 100 வாக்குகள் வித்தியாசத்தில் யாருமே வெற்றி பெறவில்லை. பாஜக வேட்பாளரின் குறைந்தபட்ச வித்தியாசமே 753 வாக்குகள் தான் என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில் தெளிவாய் தெரிகிறது.

ஆக, டெல்லியில் 36 பாஜக வேட்பாளர்கள் 2,000-க்கும் குறைவான வாக்குகளில் தோல்வி அடைந்ததாக பரப்பப்படும் தகவல் தவறானவையே. இரண்டு வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசமே குறைவானதாக உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader