This article is from Dec 06, 2020

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ரூ.350 கொடுப்பதாக பரவும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி

டில்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடக்கும் நாடகத்துக்கு ரூ.350/- கூலியாமே. கூலி கொடுக்காத காரணத்தால் நடக்கும் சண்டையை பாருங்கள். ஹிந்தி தெரிஞ்சா புரியும் இல்லாட்டி ஹிந்தி தெரியறவங்க கிட்டை காட்டி உண்மையாணு தெரிஞ்சுக்கோங்க.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு 350 ரூபாய் கொடுத்து ஆட்களை கொண்டு வந்ததாகவும், கூலி சரியாக கொடுக்கவில்லை என்பதால் நடக்கும் சண்டை என 1.42 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போராட்டத்திற்கு கூலி கொடுத்து ஆட்களை கொண்டு வந்ததாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம். அப்போது, அவ்வாறு பரவும் வீடியோ தவறானது என அறிய முடிந்தது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் 1.42 நிமிட வீடியோவில் பேசும் நபரின் ஆடையில், தலைப்பாகை ஆகியவற்றில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் கட்சியின் சின்னம் இடம்பெற்று இருப்பதை காணலாம். மேலும், வீடியோவில் காண்பிக்கப்பட்டு இருக்கும் இடம் டெல்லி போராட்ட களத்தை போல் இல்லை.

இதன் அடிப்படையில், இந்த வீடியோ ஆம் ஆத்மி கட்சியின் பேரணியிலோ அல்லது பிரச்சாரத்தின் போதோ நிகழ்ந்து இருக்க வேண்டும் எனத் தோன்றியது. அது தொடர்பான கீ வார்த்தைகளை கொண்டு தேடுகையில், ” 2018 மார்ச் 26-ம் தேதி ” Labourers allege they were denied Rs 350 promised to them for attending Kejriwal’s rally ” எனும் தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தி கிடைத்தது.

ஹரியானாவின் ஹிசார் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பேரணிக்கு ரூ.350 கொடுப்பதாகக் கூறி தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், கட்சி கூறியபடி பணமும், உணவும் வழங்கவில்லை என பேரணியில் கலந்து கொண்டவர்கள் குற்றம்சாட்டி பேசியுள்ளனர்.

வைரலான வீடியோவில் இருப்பவர்கள் அணிந்து இருக்கும் டி-ஷர்ட் போன்றும், 350 ரூபாய் பணம் அளிக்கவில்லை என்றும் செய்தியிலும் பார்க்க முடிகிறது. மேலும், வைரலான வீடியோவில் பேசுபவரும் 2018-ல் செய்தியில் வெளியான வீடியோவிலும் இடம்பெற்று இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், 2018-ம் ஆண்டு ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணிக்கு 350 ரூபாய் கொடுப்பதாக கூறிய பணத்தை கொடுக்கவில்லை என அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் பேசும் வீடியோவை டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader