டெல்லியில் மசூதி தீக்கிரையாக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டதா ?

பரவிய செய்தி
டெல்லி அசோக் நகர் மசூதி தீக்கிரையாக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்ட காட்சி.
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உருவான வன்முறை மிகப்பெரிய அளவில் கலவரமாக வெடித்து வருகிறது. இக்கலவரத்தால் 9 பேர் இறந்துள்ளதாகவும், கடைகள் உள்ளிட்டவை அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மசூதி தீக்கிரையாக்கப்பட்டு, அந்த மசூதியின் கோபுரத்தில் அனுமன் கொடி பறக்க விடப்பட்டுள்ளதாக வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இந்திய அளவில் பதற்றத்தையும், கண்டங்களையும் பெற்று வருகிறது.
மசூதியின் கோபுரத்தில் ஏறும் சில நபர்கள் அதை சேதப்படுத்தி அனுமன் கொடியையும், தேசியக் கொடியையும் ஏந்தி இருக்கும் வீடியோ காட்சியை தமிழில் பகிர்ந்த சிலர் அதனால் மகிழ்ச்சி அடைவதாகவும் பதிவிட்டு இருக்கிறார்கள்.
The Wire எனும் இணையதளம் வெளியிட்ட கட்டுரையில், முதலில் டெல்லி அசோக் விஹார் பகுதியில் மசூதி ஒன்று கலவரக் கும்பலால் சூறையாடப்பட்டதோடு மசூதியின் கோபுரத்தில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது என வெளியிட்டனர்.
DCP North West, Delhi: Some false information/news item has been circulating regarding damage to a mosque in Ashok Vihar area. It is to clarify that no such incident has taken place in the area of Ashok Vihar. Please do not spread false information.
— ANI (@ANI) February 25, 2020
பின்னர் அதை மறுத்து ” அசோக் விஹார் பகுதியில் உள்ள மசூதி சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக சில தவறான தகவல்கள்/ செய்திகள் பரவி வருகிறது. அசோக் விஹார் பகுதியில் அப்படி எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் ” என டெல்லியின் வடமேற்கு பகுதியின் டிசிபி கூறியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
Making this very clear : I personally saw the flag on top of the miniaret of the mosque at Ashok NAGAR, not VIHAR.
The mosque had been burned, and a footwear shop underneath it was looted in front of my eyes. https://t.co/tRLTWsz6qP
— Naomi Barton (@therealnaomib) February 25, 2020
டெல்லி அசோக் விஹாரில் நடைபெற்றதாக சொல்லப்பட்ட சம்பவம் உண்மையில் டெல்லி அசோக் நகரில் நடந்தது. அசோக் விஹாரில் நடைபெறவில்லை என்பது தான் செய்தி. சம்பவமே நடைபெறவில்லை என்பது அல்ல.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக Wire இணையதளத்தின் நயோமி பர்டோன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். The wire இணையதளத்தில், டெல்லி அசோக் நகர் மசூதி சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது குறித்து கட்டுரை எழுதியவரும் இவரே. பின்னர் Wire அசோக் விஹார் என்பதை அசோக் நகர் என மாற்றிவிட்டார்கள்.
மறுபுறம், டெல்லியில் மசூதிகள் சேதப்படுத்தப்படவில்லை மற்றும் எரிக்கப்படவில்லை என்றும், அவ்வாறு பரப்பப்படும் செய்திகள் தவறானவை என ஒரு தரப்பினர் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், மசூதியின் கோபுரத்தில் அனுமன் கொடி ஏற்றப்பட்டதாக வைரல் செய்யப்படும் வீடியோ டெல்லியில் நடந்தது இல்லை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிஹாரில் நடந்த சம்பவம் என பதிவிட்டு இருந்தனர். ஆனால், அந்த தகவல் தவறானவையே. ஏனெனில், பீகாரில் காவிக் கொடியை ஏற்றியதாக வெளியான செய்தியில் இருக்கும் மசூதியும், தற்போது வைரலாகும் மசூதியும் வெவ்வேறாக உள்ளன.
டெல்லியில் மசூதிகள் சேதப்படுத்தப்பட்டது உண்மையே. The wire-ல் அசோக் நகர் மசூதி என தலைப்பிட்டு வெளியிட்ட யூடியூப் வீடியோவில் எரிந்து கொண்டு இருக்கும் மசூதியில் தண்ணீரைக் கொண்டு அணைக்கும் முயற்சியால் புகையாய் இருக்கும் காட்சிகளை காண முடிந்தது.
இதுபோல், சிலர் மசூதியின் கோபுரத்தை சேதப்படுத்தி அனுமன் கொடியை ஏந்தி இருப்பதை மற்றொரு கோணத்தில் இருந்து எடுத்த வீடியோ யூடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது. கிடைத்த வீடியோக்களில் காணப்படும் கோபுரம், அருகே இருக்கும் வீடுகள் அனைத்தும் ஒரே பகுதியை சேர்ந்தது என்பதை அறிய முடிந்தது.
டெல்லியின் அசோக் நகரில் உள்ள பாடி மஸ்ஜித் எனும் பள்ளிவாசல் எரிக்கப்பட்டு உள்ளது. அந்த மசூதியின் கோபுரத்தில் அனுமன் கொடி இருக்கும் புகைப்படத்தை அவிச்சல் டுபெய் என்ற பத்திரிக்கையாளர் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு, wire வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவிற்கும் உள்ள ஒற்றுமையை மேலே காணலாம்.
It’s real video of #ashoknagar in #Delhi clicked by me.@AltNews @thewire_in @svaradarajan @therealnaomib @DelhiPolice @ANI
Hanuman Flag Placed on Minaret after vandalisation of Mosque. pic.twitter.com/83ultBFi0R— Avichal Dubey (@AvichalDubey) February 25, 2020
டெல்லி அசோக் நகர் மசூதி தீக்கிரையான புகைப்படம் என சில புகைப்படங்கள் முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்படுகிறது. ஆனால், மேற்காணும் புகைப்படங்கள் அசோக் நகர் மசூதி அல்ல. வன்முறையின் போது டெல்லி கோகுல்புரி மசூதிக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இடம்பெற்ற புகைப்படங்களே அசோக் நகர் என பரவி வருகிறது. இது மற்றொரு சம்பவமாகும்.
A mosque in #Gokulpuri was set ablaze in #DelhiRiots.
Express photos by @Somrita_Ghosh.
LIVE: https://t.co/0MJAS01VNX pic.twitter.com/7U9xOXJwaB— The New Indian Express (@NewIndianXpress) February 25, 2020
டெல்லி காவல்துறை மசூதி குறித்து தவறான செய்தி பரவுவதாக கூறியது அசோக் விஹார் பகுதியைக் குறிப்பிட்டு மட்டுமே. டெல்லி அசோக் விஹார் பகுதியில் மசூதி எரிக்கப்படவில்லை என டெல்லி காவல்துறை மறுத்ததை கூறிய ஊடகங்கள் அசோக் நகரில் மசூதி சேதப்படுத்தப்பட்டது குறித்து தெளிவுப்படுத்தமால் இருந்துள்ளனர். இதுவே டெல்லியில் மசூதிகளே சேதப்படுத்தப்படவில்லை என தவறான தகவல்கள் பரவ காரணமாகின.