அரசு பள்ளியை நவோதயா பள்ளி என பகிர்ந்த ஹெச்.ராஜா !

பரவிய செய்தி
மத்திய அரசால் இலவசமாக நடத்தப்படும் நவோதய பள்ளி எவ்வளவு வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.
மதிப்பீடு
விளக்கம்
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க எப்பொழுதும் எதிர்ப்புகள் இருக்கும். இந்நிலையில், மத்திய அரசால் நடத்தப்படும் நவோதயா பள்ளிகள் எத்தனை வசதியுடன் கட்டுப்பட்டுள்ளன என்று வந்தே மாதரம் எனும் முகநூல் பக்கத்தில் ஜூன் 14-ம் தேதி பதிவிட்டு இருந்தனர். அதனை, ஜூன் 14-ம் தேதி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் ” தகவலுக்கு ” எனக் குறிப்பிட்டு பகிரப்பட்டு உள்ளது.
அப்பதிவின் கம்மென்ட்களில், வீடியோவில் டெல்லி அரசு பள்ளி என கூறியதை கூட பார்க்காமல் பகிர்ந்து உள்ளீர்கள், ஹெச்.ராஜாவின் அட்மின் தவறாக பகிர்ந்து உள்ளார் என கிண்டல் செய்து உள்ளனர். ஹெச்.ராஜா முகநூலில் பகிர்ந்த அந்த வீடியோவில் தெளிவாக டெல்லி அரசு பள்ளி எனக் குறிப்பிட்டு உள்ளார். அதை கவனிக்காமல் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் என தவறான தகவலை பகிர்ந்து உள்ளனர்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க பெற்றோர்களே முன்வருவதாக செய்திகளில் வெளியாகின.
ஜூன் 28, 2018-ல் டெல்லி அரசு பள்ளிகள் குறித்து டெல்லியின் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சரான மனிஷ் சிசோடியா CNBC-TV18-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பார். அதில், அரசு பள்ளியின் பகுதிகள் வீடியோவில் தெளிவாக காட்டப்பட்டு இருக்கும்.
1986-ம் ஆண்டில் இந்திய அரசால் டெல்லியில் நிறுவப்பட்ட ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. டெல்லியில் 30 ஆண்டுகளை கடந்து நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. ஆனால், டெல்லியில் உள்ள அரசு பள்ளியை நவோதயா பள்ளி என தவறான தகவலை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர்.
நவோதயா பள்ளிகள் என்றால் என்ன ?
ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவோதயா பள்ளி சிபிஎஸ்இ தரத்தில் அமைக்கப்படும். அதற்கு மாநில அரசு நிலம் வழங்கினால் மட்டும் போதும், நிதியை மத்திய அரசே ஒதுக்கி பள்ளியை தொடங்கும்.
நவோதயா பள்ளிகள் மத்திய பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். கிராமப்புற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு, மாணவர்களுக்கு உணவு, உறைவிடம் உடன் கூடிய நவோதயா பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று என தொடங்க வேண்டும் என்ற கல்விக் கொள்கை 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்டது.
இதில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
எதிர்ப்பு ஏன் ?
நவோதயா பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கல்வி பயின்றாலும், 8-ம் வகுப்பிற்கு பிறகு இந்தி மற்றும் ஆங்கில மொழியே பயிற்று மொழியாக இருப்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் எதிர்க்க பல காரணங்கள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு பள்ளியில் தோராயமாக 3,000 மாணவர்கள் என வைத்துக் கொண்டால், இதில் பாகுபாடு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும், நவோதயா பள்ளிகளுக்கான நிதியினைக் கொண்டு இங்குள்ள அரசு பள்ளிகளின் தரத்தினால் உயர்த்தினால் அனைவரும் பயன்பெறுவர் என்றும் கேள்விகளை எழுப்புகின்றனர்
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.