டெல்லியில் சுத்தமான ஆச்சிஜனுக்கு ஷோரூம் !| விலை எவ்வளவு ?

பரவிய செய்தி
புது டெல்லிக்கு வந்தது சுத்தமான ஆக்சிஜன் ஷோரூம். 15 நிமிடம் சுத்தமான ஆக்சிஜன் சுவாசிக்க 299 ரூபாய் கட்டணம். அடுத்த தலைமுறை நம் கண்முன்னே பாடுபட போவதை நினைத்தால் மிக வேதனையாக உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு உச்சநிலையை எட்டியதை பலரும் அறிந்ததே. இந்நிலையில், அங்குள்ள மக்கள் காற்று மாசுபாட்டு காரணமாக மாஸ்க் அணிந்து கொண்டு செல்வது, நகரில் வாகனங்களின் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள், புதிய கட்டுமானங்களுக்கு கட்டுப்பாடுகள் என மக்களும் , அரசும் அல்லல்படும் நிலையே தொடர்கிறது. டெல்லிக்கு மட்டுமல்லாமல் பிற முக்கிய நகரங்களிலும் இந்நிலை ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டெல்லியில் உள்ள பகுதியில் சுத்தமான ஆக்சிஜனுக்காக புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ள செய்தி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த செய்தியை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக, சுத்தமான ஆக்சிஜன் என கேன்களில் அடைக்கப்பட்ட காற்றினை ஆன்லைனில், பொது வெளியில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் , சுத்தமான ஆக்சிஜனுக்கு ” Oxy pure ” என்ற ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள சகேட் பகுதியில் கடந்த மே மாதம் திறக்கப்பட்ட ” oxy pure ” என்ற ஷோரூமில் 15 நிமிடத்திற்கு சுத்தமான ஆக்சிஜனை பெறுவதற்கு 299 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இப்படி பெறப்படும் ஆக்சிஜனில் வாடிக்கையாளரின் விருப்பதற்கு ஏற்ப பல நறுமணங்களுடன் வழங்கப்படுகிறது. இதற்காக, Lemongrass, orange, cinnamon, spearmint, peppermint, eucalyptus மற்றும் lavender உள்ளிட்ட நறுமண வகைகளை கொண்டுள்ளதாக கூறுகிறார் அந்த ஷோவ்ரூமின் முதன்மை ஊழியர்.
முதற்கட்டமாகவே சகேட் பகுதியில் ” oxy pure ” ஷோரூம் திறக்கப்பட்டது உள்ளது. வருகிற டிசம்பர் மாதம்(2019) டெல்லி ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய காற்று மனிதர்களின் மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பது உடன் சருமத்திற்கும் நல்லது , மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறார்கள். முன்பெல்லாம், மன அமைதிக்கு இயற்கை சூழ்ந்த பகுதிக்கு சென்று சுத்தமான காற்றினை சுவாசிக்கும் பொழுது மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி பெறுவோம். ஆனால் , இன்று ?
மேலும் படிக்க : சென்னையிலும் காற்று விற்பனை வந்து விட்டது..!
முதலில் சுத்தமான காற்று என ஆக்சிஜன் கேன்கள் பல அயல்நாட்டு நிறுவனங்கள் மூலம் விற்பனையை தொடங்கின. டெல்லி மட்டும் இல்லாமல் , சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஆக்சிஜன் கேன்கள் விற்பனை செய்யப்பட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பாக தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் பொழுது அதை அதிசயமாக கேள்விபட்டவர்கள், யாராச்சும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவாங்களா என பேசினர். ஆனால் இன்றோ நகராட்சி, மாநகராட்சியால் குடிநீர் வழங்க முடியாத பகுதிகளில் வாட்டர் கேன்கள் தொழிலே முதன்மையாக மாறிவிட்டன. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் தண்ணீர் விற்பனை லாபம் கொண்ட தொழிலாக மாறி விட்டது.
இப்பொழுது சுத்தமான ஆக்சிஜன் என சுவாசிக்கும் காற்றினை விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இன்று கேட்பதற்கு சிரிப்பாகவும், ஆச்சரியமாக இருந்தாலும் வருங்காலத்தில் மாசு அடைந்த பகுதிகளில் சுத்தமான காற்றிற்கு வழி இல்லாமல், இதுபோல் விற்பனை செய்யப்படும் காற்றினை சுவாசிக்கவே மாற்றப்படுவோம். இதுவே எதார்த்தம் !