This article is from Mar 02, 2020

டெல்லி வன்முறையில் இந்து சிறுமி வன்கொடுமை செய்து கொலையா ?

பரவிய செய்தி

இந்த சட்டவிரோதமாக வந்த குடியுரிமை இல்லாத நாய்களுக்கு ஆதரவளிக்கும் அனைவரும் இங்கு வாழும் மக்களை மறந்து விட்டீர்கள். டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் கற்பழிக்கப்பட்டு ஓட்டுத்துணியில்லாமல் சாக்கடையில் வீசப்பட்ட 16 வயதே ஆன என் தேசத்துச் சிறுமி.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

மார்ச் 2-ம் தேதி கு. அய்யா துரை எனும் முகநூல் பக்கத்தில், ” டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் 16 வயதான இந்து சிறுமி 40 முஸ்லீம்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டுள்ளதாக ” கூறி ஓர் சிறுமியின் புகைப்படத்துடன் பதிவிட்ட பதிவொன்று முகநூலில் வைரலாகி வருகிறது. இப்பதிவை பல முகநூல் குழுக்களில் பகிரவும் செய்கின்றனர்.

இந்திய அளவில் டெல்லி வன்முறை சம்பவத்தால் இந்து-முஸ்லீம் மதப் பிரச்சனையை பெரிதுபடுத்தும் விதத்தில் பல பதிவுகளை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அத்தருணத்தில் இந்து குழந்தையை 40 முஸ்லீம்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுள்ளதாக ஓர் தகவலை பரப்பத் தொடங்கி உள்ளனர். இது குறித்து ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

16 வயது குழந்தை எந்த மதமாக இருந்தாலும் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டிருந்தால் இந்திய அளவில் ஊடகத்தில், சமூக ஊடகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், முகநூலில் பரப்பப்படும் பதிவில் இருப்பது போன்று, டெல்லி வன்முறையில் சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

Facebook link | archived link 

சம்பவம் நிகழ்ந்ததாக எந்தவொரு தகவலும் இல்லை என்பதால் பரப்பப்படும் பதிவில் இருக்கும் புகைப்படம் குறித்து ஆராய்ந்து பார்த்தோம். சிறுமியின் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில் மார்ச் 1-ம் தேதி ஹிந்தி மொழியில் வெளியான பதிவில் அதே புகைப்படமும், அதே தகவலும் இடம்பெற்று இருக்கிறது. கூடுதலாக, 13 வயது குழந்தையின் உடைகள் தாஹிர் உசைன் என்பவரது தொழிற்சாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

twitter link | archived link 

இதற்கு முன்பாக, 2020 பிப்ரவரி 28-ம் தேதி சுனில் அஸ்தாய் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் அதே சிறுமியின் புகைப்படத்துடன் ட்வீட் பதிவிட்டு இருந்தார். அதில், ” தூக்கிலிடப்பட வேண்டும். மால்வா மாவட்டத்தில் உள்ள சுசினீரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஜோதி பாட்டிதர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கீழ் பாதி எரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்பது பீம் ஆர்மியின் கோரிக்கை. மகள்களை பாதுகாக்கவும் ” என பதிவாகி இருக்கிறது.

Facebook link | archived link 

பிப்ரவரி 20-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் ஆகர் மாவட்டத்தில் உள்ள பர்சுலிகல்யாண் எனும் பகுதியில் 12-ம் வகுப்பு படித்து மாணவியின் உடல் கருகிய நிலையில் அவரது வீட்டிலேயே கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை அமைக்கப்பட்டது குறித்து வெளியான போலீஸ் ஆணை மற்றும் அப்பெண்ணின் புகைப்படம் மற்றொரு முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

மேற்காணும் நியூஸ் 9 நெட்வொர்க் எனும் சேனலில் வெளியான வீடியோவில், பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையில் போலீசார் போதிய ஆர்வம் காட்டவில்லை என பெண்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருப்பவர்கள் கைகளில் வைரலாகும் பெண்ணின் புகைப்படம் இருப்பதை காணலாம். டெல்லி வன்முறைக்கு முன்பாகவே மத்தியப் பிரதேசத்தில் அப்பெண்ணின் மரணம் நிகழ்ந்து உள்ளது.

நம் தேடலில் இருந்து, டெல்லி வன்முறையில் 40 முஸ்லீம்களால் இந்து சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வைரல் செய்யப்படும் தகவல் ஆதாரமில்லாமல் பரப்பப்படுபவை. அந்த வதந்தி உடன் பரப்பப்படும் பெண்ணின் புகைப்படம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம், இதற்கும் டெல்லி வன்முறைக்கும் சம்பந்தமில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

இன்றைய இந்தியாவில் மத வன்மத்தை தூண்டும் வகையில் தவறான பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வருவதால் செய்தியின் உண்மையை அறிந்து பகிருங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader