டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை குஜராத்தில் பிடிக்கும் காட்சியா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி சிஏஏ கலவரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சிராஜ் முகமத் அன்வரை குஜராத்தில் வைத்து உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக 2.20 நிமிட சிசிடிவி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் செய்யப்படுகிறது.
bjpkalyan எனும் ட்விட்டர் பக்கத்தில், ” டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டும் காட்சி ” என பதிவிட்டு இருந்தார். ஆனால், ட்வீட் பதிவில் இருந்த வீடியோ நீக்கப்பட்டு இருந்தது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
உணவகத்தில் வைத்து போலீசார் கைது செய்யும் வைரல் வீடியோ குறித்து தேடுகையில், குஜராத் போலீஸ் சினிமா பாணியில் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக 2021 ஜூலை 1-ம் தேதி வெளியான செய்தியில் இதே சிசிடிவி வீடியோ வெளியாகி இருக்கிறது.
செய்தியில், ” கொள்ளை, பலாத்காரம் என 14 குற்ற வழக்குகளில் ஈடுபட்ட தேடப்படும் குற்றவாளியான கிஷோர் லுஹார் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேரையும் குஜராத் பதான் மாவட்டத்தின் சரஸ்வதி தாலுகாவில் உள்ள அமர்புரா கிராமத்தின் உணவகத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி கைத்துப்பாக்கியும் வைத்திருந்தார். கிஷோர் லுஹார் அஹமதாபாத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர். ஜூன் 27-ம் தேதி போலீசார் கைது செய்யும் போது பதிவான சிசிடிவி வைரலாகி வருகிறது ” என வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் வீடியோ உடன் கூறிய நிலைத்தகவலில் பரூச் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால், வீடியோ அமர்புரா கிராமத்தின் உணவகத்தில் எடுக்கப்பட்டது.
பரூச் பகுதியில் வேறு ஏதாவது கைது நடவடிக்கை நடைபெற்றதா எனத் தேடுகையில், ஜூன் 30-ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” குஜராத் மாநிலத்தின் பரூச் பகுதியில் உள்ளூர் குற்றப் பிரிவு அதிகாரிகள் இரு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த சிராஜ் மன்சூர் ஆலம் அன்சாரி என்பவரை கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர் பிம்புரா பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜே.என்.ஜாலா கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த ஊரில் இருந்து ஆயுதங்களை விற்க இங்கு கொண்டு வந்ததாக ஒப்புக் கொண்டார் ” என வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை குஜராத்தில் பிடிக்கும் காட்சி என வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. அது டெல்லி கலவரம் தொடர்பான கைது நடவடிக்கையே அல்ல. அந்த வீடியோவில் கைது செய்யப்பட்ட நபர் கிஷோர் லுஹார் குஜராத்தில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டவர்.
அடுத்ததாக, குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் பீகாரைச் சேர்ந்த சிராஜ் மன்சூர் அன்சாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரு கைத்துப்பாக்கிகளை விற்க முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இரு சம்பவங்களிலும் டெல்லி கலவரம், சிஏஏ போராட்டத்தில் தொடர்புடையவர்கள் என இடம்பெறவில்லை. குஜராத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற போலீஸ் கைது நடவடிக்கையை இணைத்து வதந்தியை பரப்பி வருகிறர்கள் என அறிய முடிகிறது.