பிரதமர் மோடி டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டினாரா ?

பரவிய செய்தி
டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு இராணுவ தளபதி பிபின் இராவத் பெயர் சூட்டினார் பிரதமர் மோடி.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவத்தினர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை பிரதமர் மோடி சூட்டி உள்ளதாக ஓர் தகவல் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
2021 டிசம்பர் 13-ம் தேதி ” டெல்லி அக்பர் சாலைக்கு ஜெனரல் பிபின் ராவத் பெயர்? ” எனும் தலைப்பில் தினமலர் செய்தியில், ” டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு, சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பெயரை வைக்க உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கார்க் கோரிக்கை விடுத்துள்ளார் ” என்றே வெளியாகி இருக்கிறது.
டெல்லி சாலைக்கு பிபின் ராவத் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டியதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
இதேபோல், டெல்லி பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால், டெல்லி அக்பர் சாலைக்கு முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை வைக்க வேண்டும் என டெல்லி மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
டெல்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது முதல் முறையல்ல. அக்பர் சாலையை மகாராணா பிரதாப் சாலை என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி அமைச்சர் விகே சிங் கடிதம் எழுதி இருந்தார். அக்டோபர் மாதம், அக்பர் சாலையின் அறிவிப்பு பலகை சேதப்படுத்தப்பட்டது மற்றும் அவற்றின் மீது ” சாம்ராட் ஹேமு விக்ரமாதித்யா மார்க் ” என அறிவிக்க வேண்டும் என்கிற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.