டெல்லி அரசுப் பள்ளியில் பாரத மாதா கிரீடத்தை கழட்டி நாமஸ் செய்ய கற்பிப்பதாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
டெல்லி அரசு பள்ளிகளில் இது நடக்கிறது!! நமது பாரததாயின் தலையில் இருந்து கிரீடத்தை அகற்றி வெள்ளை துணியை வைத்து நமாஸ் கற்பிக்கப்படுகிறது. இது டெல்லி ஸ்கூல் கேஜ்ரிவால் முதல்வராக உள்ள பகுதி. தமிழக ஹிந்துக்களே சிந்தியுங்கள்!!!!
மதிப்பீடு
விளக்கம்
“டெல்லி அரசு பள்ளிகளில் இது நடந்தது, இந்திய அன்னையின் தலையில் இருந்து கிரீடத்தை அகற்றி வெள்ளை துணியை வைத்து கல்மா கற்பிக்கப்படுகிறது. இது அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ள பகுதி” என்றுக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
30 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பள்ளி ஒன்றில் மாணவர்கள் நாடகம் ஒன்றில் கலந்து கொள்வது போலவும், பாரத மாதா வேடமணிந்த ஒரு குழந்தையின் தலையிலிருந்த கிரீடத்தை, இஸ்லாமியர்கள் போல வேடமணிந்த குழந்தைகள் கழற்றிவிட்டு வெள்ளைத்துணியை அணிவிப்பது போலவும், பின்பு அவர்கள் நமாஸ் செய்வது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி அரசு பள்ளியில் இது நடக்கிறது! இந்திய அன்னையின் தலையில் இருந்து கிரீடத்தை அகற்றி வெள்ளை துணியை வைத்து கல்மா கற்பிக்கப்படுகிறது. இது டெல்லி ஸ்கூல் கேஜ்ரிவால் முதல்வராக உள்ள பகுதி. ராகுல் அமெரிக்காவில் பாக் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை இதற்காக தான்! #வலைத்தளபகிர் pic.twitter.com/Qj1AMYKBh1
— DINESHKUMAR (@kkdkumar) June 18, 2023
டெல்லி அரசு பள்ளிகளில் இது நடக்கிறது
இந்திய அன்னையின் தலையில் இருந்து கிரீடத்தை அகற்றி வெள்ளை துணியை வைத்து கல்மா கற்பிக்கப்படுகிறது.@ArvindKejriwal முதல்வராக உள்ள பகுதிஎன்னப்பா அரவிந்த் கெஜ்ரிவால் இது@kaippulla123 @Karthikaprasan @Political_satir @_KARAYAAN_ @Kattaerumbu_bjp pic.twitter.com/oGeWrDR5Qj
— அரசியல் அனாதை (@Pandiyanattan20) June 14, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீஃபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டது அல்ல, உத்திரப் பிரதேசத்தின் மாள்வியா நகரில் உள்ள சிஷு பாரதிய வித்யாலயா பள்ளியில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து தேடியதில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று LUCKNOW POLICE தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 2:18 நிமிடங்கள் கொண்ட முழுப்பகுதியை வெளியிட்டிருந்தது. அதில் “மத நல்லிணக்கத்திற்காக குழந்தைகளால் நடத்தப்பட்ட நாடகத்தின் முழு வீடியோ. சில சமூக விரோதிகளால் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு வகுப்புவாத வெறுப்பைப் பரப்பி வருவது பெரும் குற்றச் செயலாகும். அத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
छोटे बच्चों द्वारा सांप्रदायिक सौहार्द हेतु प्रस्तुत नाटिका का सम्पूर्ण वीडियो,जिसको कुछ असामाजिक तत्वों द्वारा गलत ढंग से प्रचारित कर सांप्रदायिक द्वेष फैलाने का अपराधिक कृत्य किया गया है। ऐसे लोगों के विरुद्ध सख्त कानूनी कार्रवाई की जाएगी।@Uppolice https://t.co/eWBatkgnyc pic.twitter.com/oKOmLGVszX
— LUCKNOW POLICE (@lkopolice) August 15, 2022
மேலும் இந்த பதிவில் காவல்துறையினரின் ஒரு அறிக்கையையும் காண முடிந்தது. அதில் “சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட வீடியோ தொடர்பாக பஜார்கலா காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் பாரத மாதாவின் தலையில் இருந்து கிரீடத்தை கழற்றி நமாஸ் செய்யச் சொல்லப்பட்டுள்ளது. அந்த வீடியோவை சோதனை செய்தபோது, அந்த வீடியோ மாள்வியா நகர் தானா பஜார் காலாவில் அமைந்துள்ள சிஷு பாரதிய வித்யாலயா பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிந்தது.
இதுகுறித்து, பள்ளி மேலாளரிடம் விவாதித்தோம், “மதத்தின் பெயரால் தகராறு செய்ய வேண்டாம், சமூக நல்லிணக்கம் காக்க வேண்டும்” என்பதை மையமாகக் கொண்டு பள்ளி குழந்தைகள் நாடகம் நடத்தியுள்ளது தெரிந்தது. வீடியோ முழுவதும் எங்களால் பார்க்கப்பட்டது. ட்வீட்டரில் வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் பரப்பி குழப்பத்தை பரப்பும் வேலையைச் செய்துள்ளார்கள், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen to the teacher who had choreographed the act.#Lucknow pic.twitter.com/Jn9nonBpDy
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) August 15, 2022
டைம்ஸ் ஆப் இந்தியாவின் பத்திரிக்கையாளரான அரவிந்த் சவுகான், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நாடகத்தை மாணவர்களிடம் கற்பித்த ஆசிரியை பேசியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவில் காவல்துறை அதிகாரியான DCP சின்னப்பா இது குறித்து பேசியுள்ள வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்து, இஸ்லாம், சீக்கிய மற்றும் கிறிஸ்துவ மதங்களின் ஒற்றுமையைக் குறிக்க குழந்தைகளால் நடத்தப்பட்ட 2:18 நிமிடங்கள் கொண்ட நாடக வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் பரப்பி, சிலர் சமூக ஊடகங்களில் வகுப்புவாதத்தைத் தூண்டி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: இஸ்லாமியர் ஒருவர் சிறுநீர் பயன்படுத்தி பாப்கார்ன் தயாரித்ததாகப் பரவும் பொய் செய்தி !
மேலும் படிக்க: ஆட்டோ பின்னால் ‘ இந்துக்கள் தூங்குகிறார்கள் ‘ என ஃபோட்டோஷாப் வாசகம்.. மீண்டும் பொய் பரப்பும் சரவண பிரசாத் !
முடிவு:
நம் தேடலில், டெல்லி அரசு பள்ளியில் பாரத மாத வேடமணிந்த குழந்தையின் தலையிலிருந்த கிரீடம் கழற்றப்பட்டு, வெள்ளை துணி அணிவிக்கப்பட்டு நமாஸ் செய்ய கற்பிக்கப்படுகிறது எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.