அதிக கட்டணம் வசூலித்த 575 பள்ளிகள்: அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி முதல்வர்.

பரவிய செய்தி

டெல்லியில் அதிக கட்டணம் வசூலித்த 575 தனியார் பள்ளிகளுக்கு, அக்கட்டணத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அரசு அதிரடி உத்தரவு.

மதிப்பீடு

விளக்கம்

தனியார் பள்ளிகளில் மட்டுமே சிறந்த கல்வி வழங்கப்படும் என்ற எண்ணம் இந்திய பெற்றோர்களிடம் ஆழமாக பதிந்து விட்டது. இதனால் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளை தேடி செல்வதால் நாடு முழுவதும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளி கட்டணத்தை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனியார் பள்ளிகள் உயர்த்திக் கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது நடுத்தரக் குடும்பங்கள் மட்டுமே. பள்ளிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவுகள் பிறப்பித்தாலும் மறைமுகமாகவோ அல்லது பிற கட்டணம் என்றுக் கூறி அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க டெல்லி அரசு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

” டெல்லியில் அதிக கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் 575 தனியார் பள்ளிகள் அதிகமாக வசூலித்த கட்டணத்தை பெற்றோரிடம் திருப்பி செலுத்த வேண்டும் என்று நேரடி உத்தரவை ” அரவிந்த் கேஜ்ரிவால் அரசு பிறப்பித்துள்ளது. வசூலித்த அதிக கட்டணத்தை 9 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும், ஒருவேளை திரும்ப செலுத்த தவறினால் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும்,  டெல்லியில் உள்ள 1169 தனியார் பள்ளிகளில் கட்டண உயர்வு பற்றிய தணிக்கை செய்ய குழு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

“ பள்ளிகள் அனைத்தும் நேரடியாக கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் “ என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஆம் ஆத்மி கட்சியின் உத்தரவை பற்றியும்,  அதிக கட்டணம் வசூலித்த 575 தனியார் பள்ளிகளின் பட்டியலும் AAP Ka Mehta ட்விட்டர் பக்கதில் வெளியிடப்பட்டது.

இதற்கு சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் 2 பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் ஏதும் வழங்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்தியதை கண்டித்து கட்டணத்தை திருப்பி செலுத்த உத்தரவிட்டது டெல்லி அரசு. இதன்பின்னர் மற்ற பள்ளிகளில் உள்ள கட்டண உயர்வுக் குறித்து முதல்வருக்கு பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

“ முதல் முறையாக இந்த நாட்டில் பள்ளிகள் அனைத்தும் ஒழுக்கமாக உள்ளன. அவர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க முடியாது. பெரும்பாலான பள்ளிகள் உயர்த்திய கட்டணத்தை திருப்பி செலுத்தி வருகின்றன. காரணம் டெல்லியில் இருப்பது நேர்மையான அரசாங்கம் ” என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலிப்பதை விடுத்து தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்திக் கொள்கின்றன. மேலும், புத்தகம், சீருடை, பிற வகுப்புகள் எனக் காரணம் காட்டி தனியாக கட்டணம் வசூலிக்கவும் செய்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க அரசுகள் தான் தனியார் பள்ளிகள் மீது இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வியை வியாபாரமாக மாற்றும் செயல் தடுக்கப்பட வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button