This article is from Feb 26, 2020

டெல்லி வன்முறையில் துப்பாக்கி ஏந்திய நபர் சிஏஏ ஆதரவாளரா ?

பரவிய செய்தி

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது சுடும் சிஏஏ ஆதரவு குண்டர். கபில் மிஸ்ராவின் கோபமூட்டும் பேச்சுக்கு பிறகே இப்படி நடந்துள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டங்களில் உருவான வன்முறை சம்பவத்தால் தலைநகரில் கலவரங்கள் உண்டாகின. குறிப்பாக, கலவரத்தின் போது ஆயுதம் இல்லாத போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பிக்கும் சிவப்பு நிற டிஷர்ட் அணிந்த நபரின் புகைப்படம் மற்றும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. மேலும், தலைநகர் டெல்லி குறித்த பதற்றம் உருவாகி இருக்கிறது.

இதற்கிடையில், போலீசை நோக்கி மற்றும் வேலிக்கு அந்த பக்கம் நோக்கி துப்பாக்கியை காண்பிக்கும் நபர் ஒருபுறம் சிஏஏ ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி என்றும், மறுபுறம் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் என இருவேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த நபர் பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா அளித்த பேட்டியின் பொழுது அவருக்கு பின்னால் இருப்பதாகவும் ஒரு புகைப்படம் பரவி வருகிறது.

உண்மை என்ன ? 

டெல்லியின் ஜஃப்பார்பாத் பகுதியில் போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய நபர் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களின் திசையில் இருந்து வந்ததாக களத்தில் இருந்த ஹிந்து செய்தியின் பத்திரிக்கையாளர் செளரபா திரிவேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ உடன் பதிவிட்டு உள்ளார். அந்த நபர் துப்பாக்கியால் எட்டு முறை சுட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Twitter link | archived link

வீடியோவில் சிவப்பு நிற டிஷர்ட் அணிந்த நபர் போலீசை நோக்கி வந்து மிரட்டும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. பின்னர் வேறொரு திசையில் துப்பாக்கியால் சுடும் காட்சிகளும், அங்கிருந்து பின்னோக்கி செல்வது உள்ளிட்டவையும் பதிவாகி இருக்கின்றன. எனினும், கலவரத்தில் இருப்பவர்கள் கையில் காவி நிறத்தில் இருப்பதை வைத்தும் சிஏஏ ஆதரவு கும்பல் என சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். அது தொடர்பாக செளரபா திரிவேதி மற்றொரு ட்வீட் பதிவில் விளக்கம் அளித்து உள்ளார்.

Twitter link | archived link

” ஜஃப்பார்பாத் பகுதியில் நடைபெற்ற வன்முறையின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் காவிக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறி வருகிறார்கள். இந்த வழக்கில் அப்படி இல்லை. பின்பக்கத்தில் இருக்கும் ” காவி ” ஆனது கடைகளில் பாலுக்காக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் ட்ரேக்கள். அதை பாதுகாப்பு கவசம் போன்று பயன்படுத்தி இருக்கிறார்கள் ” எனக் கூறி உள்ளார்.

வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் ஆரஞ்சு, சிவப்பு நிறத்தில் பிளாஸ்டிக் ட்ரேக்கள் இருப்பதை வட்டமிட்டு காண்பித்து உள்ளோம்.

Twitter link | archived link

மேலும், தி குய்ண்ட் இணையதளத்தைச் சேர்ந்த நிரூபர் ஐஸ்வர்யா எஸ் ஐயர் தன் ட்விட்டர் பக்கத்தில், ” ஜஃப்பார்பாத்-ல் இருந்து சிஏஏ எதிர்ப்பாளர்கள் ஒருபுறம் மற்றும் முஜிபூர் பகுதியில் இருந்து சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்கள் மறுபுறம் ” என வடகிழக்கு டெல்லியின் ஜஃப்பார்பாத்/முஜிபூர் இடையே வன்முறை மையப் பகுதியில் இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

பத்திரிக்கையாளர் திரிவேதி, ஜஃப்பார்பாத் பகுதியில் இருந்தவர்கள் கைகளில் பிளாஸ்டிக் ட்ரேக்களை வைத்திருந்ததாக கூறியது மற்றும் அவர் பதிவிட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ட்ரேக்கள் இருப்பது போலவே ஐஸ்வர்யா எஸ் ஐயர் வெளியிட்ட வீடியோவில் இருப்பவர்களும் ஆரஞ்சு, சிவப்பு நிற ட்ரேக்களை பாதுகாப்பு கவசம் போன்று வைத்துள்ளனர்.

ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோவின் இறுதி காட்சியில் இருக்கும் போலீஸ் மற்றும் டெக்கான் க்ரோனிக்கல் உள்ளிட்ட செய்தி தளங்களில் வெளியான கலவரத்தின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருக்கும் போலீஸ் மஞ்சள் நிறத்தில் டிஷர்ட், ஹெல்மெட் அணிந்து இருப்பதை காண முடிகிறது. கிடைத்த தகவலில் இருந்து கலவரத்தில் போலீஸ் நோக்கி துப்பாக்கியை காண்பித்த நபர் சிஏஏ எதிர்ப்பு போராட்ட களத்தில் இருந்து வந்துள்ளார் என அறிய முடிகிறது.

பாஜக கபில் மிஸ்ரா : 

டெல்லி கலவரத்தில் போலீஸ் நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய நபர் டெல்லி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கபில் மிஸ்ரா உடன் இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.

இரண்டு புகைப்படத்தில் இவர்களின் முகம், முடி உள்ளிட்டவையில் வேறுபாடுகள் இருப்பதை காணலாம். இருவரும் வெவ்வேறு ஆட்கள் என்பதையும் இதில் இருந்து அறிய முடிகிறது. மேலும், துப்பாக்கியை ஏந்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயர் ஷாருக் என டெல்லி போலீசார் கூறியுள்ளதாக சில செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. பிற விவரங்கள் தெரிய வந்த பிறகு விரிவாக இணைக்க உள்ளோம்.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, டெல்லியில் போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பித்த நபர் டெல்லி பாஜகவின் கபில் மிஸ்ரா உடன் இருப்பதாக வைரல் செய்யும் புகைப்படம் தவறானவை. களத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள் அளித்த தகவலின்படி அந்த நபர் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திசையில் இருந்து வந்துள்ளார். அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader