This article is from Feb 27, 2020

டெல்லியில் துப்பாக்கி ஏந்திய நபரின் பெயர் அனுராக் டி மிஷ்ராவா ?

பரவிய செய்தி

துப்பாக்கியால் சுட்ட இவனைத்தான் முஸ்லிமாகிய ஹாரூக் என சங்கி பொய் பரப்புரையில் ஈடுபட்டனர். இவன் பெயர் அனுராக் மிஷ்ரா.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

தலைநகர் டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் உருவான வன்முறையால் அப்பகுதியே கலவர பூமியாக உருவெடுத்தது. இந்த கலவரத்தில் ஜஃப்பார்பாத் பகுதியில் போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய நபரின் புகைப்படம் மற்றும் வீடியோ இந்திய அளவில் வைரலாகியது.

டெல்லி கலவரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் சிஏஏ ஆதரவாளர் என்றும், இல்லை இல்லை அவர் சிஏஏ எதிர்ப்பாளர் என இருவேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தன. இந்நிலையில் தான், அந்த நபரை டெல்லி போலீஸ் கைது செய்ததோடு, அவரின் பெயர் ஷாரூக் என தகவல் வெளியிட்டனர்.

Facebook link | archived link

ஆனால் அது பொய், துப்பாக்கி ஏந்திய நபரின் பெயர் அனுராக் டி மிஷ்ரா என்றும், “Anurag D Mishra ” எனும் முகநூல் பக்கத்தில் வெளியான புகைப்படத்தை எடுத்து இரண்டு நபரும் ஒருவரே என முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. இது இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

டெல்லி போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பித்த நபரும், அனுராக் மிஷ்ரா என்ற முகநூல் பக்கத்தில் இருக்கும் நபரும் இரு வேறு நபர்கள். அனுராக் மிஷ்ரா உடைய முகநூல் பக்கத்தில் அளிக்கப்பட்ட தகவலில் ” அவர் ஒரு நடிகர் ” என்பதை அறிய முடிந்தது. அவர் தற்பொழுது மும்பையில் வாழ்ந்து வருகிறார்.

தன் முகநூல் பக்கத்தை துப்பாக்கி ஏந்திய நபருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், தவறான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அனுராக் தன் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். இது விவகாரத்தால் தொடர்ந்து பல மறுப்பு பதிவுகளை அனுராக் வெளியிட்டு வருகிறார்.

Facebook link | archived link

Facebook link | archived link

ANI உள்ளிட்ட சில செய்தி சேனல்களில், டெல்லியில் துப்பாக்கி ஏந்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் டெல்லி ஷாத்ரா பகுதியைச் சேர்ந்த ஷாரூக் என டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்து இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும் படிக்க : டெல்லி வன்முறையில் துப்பாக்கி ஏந்திய நபர் சிஏஏ ஆதரவாளரா ?

இதுபோல், துப்பாக்கி ஏந்திய நபர் டெல்லி பாஜகவைச் சேர்ந்த கபில் மிஷ்ரா உடன் இருப்பதாக வைரலாக புகைப்படம் தவறானது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அக்கட்டுரையில், அந்நபர் குறித்து களத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள் அளித்த தகவலையும் இணைத்து இருந்தோம்.

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, டெல்லியில் போலீஸ் நோக்கி துப்பாக்கியை காண்பிக்கும் நபரும், அனுராக் டி மிஷ்ரா முகநூல் பக்கத்தில் இருப்பவரும் இரு வேறு நபர்கள் என்பதை அறிய முடிகிறது. பதற்றமான சூழ்நிலையில் செய்திகளை பகிர்வதற்கு முன்பாக அதன் நம்பகத்தன்மையை அறிய முற்படவும்.

Please complete the required fields.




Back to top button
loader