வெள்ள நீரில் மூழ்கிய டெல்லி சாலை என பரவும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரில் நாற்காலிகளை வைத்து அமர்ந்து டீ குடிப்பது போன்றும், குழந்தைகள் விளையாடுவது போன்றும் எடுக்கப்பட்ட மேற்காணும் புகைப்படத்தை வைத்து டெல்லியை லண்டனை போன்று மாற்றுவதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் தேம்ஸ் நதியை டெல்லிக்குள் திருப்பி விட்டார் என கிண்டல், கேலி உடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழில் ஒத்த செருப்பு எனும் முகநூல் பக்கத்தில் இப்பதிவு வெளியாகி இருக்கிறது.
அதுபோலவே, ” டெல்லியை லண்டனைப் போல் மாற்றமுடியுமா எனத் தெரியவில்லை, ஆனால் வெனிஸ் போன்று அவர் மாற்றுவார் ” எனும் கிண்டல் பதிவை இந்திய அளவில் பிற மொழிகளில் அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. இன்னும் சிலர், இப்புகைப்படம் குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்றும் பகிர்ந்து இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
டெல்லி என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2016-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி குர்மீத் சிங் மீட் ஹயேர் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாப் மன்சா மாவட்டத்தில் உள்ள குடும்பம் மந்தமான கழிவுநீர் வெளியேற்றும் பணிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என இப்புகைப்படத்தினை வெளியிட்டு உள்ளார்.
Family in Mansa dist #Punjab protesting against shoddy sewage wrk by #akalis .Ppl r waiting fr 2017 @ArvindKejriwal pic.twitter.com/VUZFNjxuzR
— Gurmeet Singh Meet Hayer (@meet_hayer) July 18, 2016
2016-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி சுபாஷ் சச்தேவ் என்பவரின் முகநூல் பக்கத்தில் மன்சா நகரில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம் என குடும்பத்தினர் மழை நீரின் நடுவில் அமர்ந்து டீ அருந்தும் பல புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஆளும் டெல்லியில் வெள்ளத்தால் தேங்கிய நீரில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கூறி இந்திய அளவில் அரசியல் உள்நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக தவறாக பரப்பி வருகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளம் என வந்தால் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் வழிமுறைகளை செய்திருக்க வேண்டியதே முதன்மையானது. ஆனால், அரசியல் சார்ந்த கிண்டல்கள், தவறான கருத்துக்களோ சமூக வலைதளங்களில் குவிந்து கிடக்கின்றன.
முடிவு :
நம் தேடலில், அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லிக்குள் தேம்ஸ் நதியை திருப்பி விட்டதாக கிண்டல் செய்யப்படும் புகைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.