டெல்லியில் பெண்ணை கொடூரமாக கொலை செய்யும் வீடியோ.. லவ் ஜிகாத் என வதந்தி !

பரவிய செய்தி
டெல்லியில் ஹிந்து பெண்கள் நிலமை இஸ்லாமிய இளைஞனின் லவ் ஜிஹாத் கொடூரம் !
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி சாலையின் ஓரத்தில் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் நபர் திடீரென கத்தியால் அப்பெண்ணை குத்தி கொடூரமாக தாக்குகிறார். அருகில் யாரும் வரக் கூடாது என மிரட்டி தொடர்ந்து அப்பெண்ணை சரமாரியாகக் குத்திக் கொலை செய்யும் 1.41 நிமிடம் கொண்ட சிசிடிவி வீடியோவை ” டெல்லியில் இந்து பெண்களின் நிலைமை மற்றும் லவ் ஜிகாத் ” என தலைப்பிட்டு வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை வைரல் செய்து வருகிறார்கள்.
பெண்ணை கொலை செய்யும் வீடியோ மனதை பதைபதைக்கும் வகையில் இருப்பதால் வீடியோவை நேரடியாக நாங்கள் பதிவிடவில்லை. வீடியோ லிங்க் : Facebook link
உண்மை என்ன ?
டெல்லி சாலையில் பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேடுகையில், ” டெல்லி சந்தையில் பெண் ஒருவர் தன் கணவனால் 25 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ” வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற காட்சியுடன் ஏப்ரல் 10-ம் தேதி NDTV-ல் செய்தி வெளியாகி இருக்கிறது.
முன்னணி செய்தி நிறுவனங்கள் பலவும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டு இருக்கின்றன. இந்தியா டுடே செய்தியில், ” கொலை செய்யப்பட்ட பெண் டெல்லி சஃப்தார்ஜுங் மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயதான நீலு மேத்தா என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரின் கணவர் ஹரிஷ் மேத்தா திருமண தகவல் மையத்தில் பணியாற்றுகிறார். இருவருமே குஜராத்தின் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர்கள்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட இருவரும் டெல்லி புத் விஹார் பகுதியில் வசித்து வந்துள்ளனர் ” என வெளியாகி இருக்கிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, தனக்கு துரோகம் செய்ததாக நினைத்து ஹரிஷ் மேத்தா தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
முடிவு :
நம் தேடலில், டெல்லியில் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யும் வீடியோவில் இருப்பது கணவன் மனைவியே. அவர்கள் இருவருமே இந்துக்கள். ஆனால், டெல்லியில் இந்து பெண்களின் நிலைமை என்றும், லவ் ஜிகாத் என்றும் வதந்தியை பரப்புகிறார்கள் என அறிய முடிகிறது.